13 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத மப்பேடு ஆண்கள் சுகாதார வளாகம்

மப்பேடு: மப்பேடு ஊராட்சியில், ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும், இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள தண்டலம் – அரக்கோணம், மப்பேடு – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், மப்பேடு காவல் நிலையம் எதிரே, கடந்த 2013ம் ஆண்டு, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

அது, இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல், பூட்டியே கிடந்து வீணாகி வருவதோடு, குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் ‘குடி’மையமாகவும் மாறி வருகிறது.

இந்த ஆண்கள் சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால், மப்பேடு கூட்டுச் சாலைக்கு வரும் ஆண்கள், இயற்கை உபாதை கழிப்பதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement