இளம்பெண் தற்கொலை விருதையில் பரபரப்பு
விருத்தாசலம்: இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தொட்டிகுப்பத்தை சேர்ந்தவர் பால்சாமி மகள் புஷ்பா, 23; கடந்த 2021ம் ஆண்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம், இலுக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த அறிவரசன் என்பவருடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தொட்டிகுப்பம் மதியழகன், 27, என்பவரை காதலித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் குடும்ப தகராறு நிலவியதால், தாய் வீட்டில் வந்து தங்குவது வழக்கம். கடந்த மாதம் பெற்றோர் சமாதானம் செய்து வைத்து, விருத்தாசலம், பெரியார் நகர், பிரதான கடலுார் சாலையில் உள்ள வீட்டில் இருவரையும் வாடகைக்கு தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை புஷ்பா வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலின்பேரில், பால்சாமி, அவரது மனைவி காந்தி இருவரும் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் உள்ளிட்ட போலீசார் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புஷ்பாவின் தாய் காந்தி புகாரின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும், திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் துாக்கில் தொங்கிய தகவலறிந்து, அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.