ஏரியை சூழ்ந்த கருவேல மரங்கள் மழை நீரை சேமிப்பதில் சிக்கல்

பொன்னேரி, ஜூன் 5–

பனப்பாக்கம் ஏரியில் கருவேல மரங்கள் சூழ்ந்திருப்பதால், மழைநீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி அமைந்து உள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, 300 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், ஏரியின் பெரும்பாலான பகுதிகளை கருவேல மரங்கள் சூழ்ந்து, காடாக மாறி இருக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை, இவை வேகமாக உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏரியில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, நீர்வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது

ஏரிக்கு உள்வாய் பகுதி எதுவும் இல்லை. சுற்றிலும் கரைகளை கொண்டதாக இருப்பதால், வரத்துக்கால்வாய் வழியாக மட்டும் குறைந்த அளவே தண்ணீர் வந்தடைகிறது.

அந்த தண்ணீரும், கருவேல மரங்களால் விரைவில் உறிஞ்சப்படுகிறது. கோடைகாலத்திற்கு முன்பே, ஏரி வறண்டு விடுகிறது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கருவேல மரங்களை அகற்றினால், மழைநீரை பாதுகாத்து, பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement