நந்திவரம் பெயர் இருட்டடிப்பு உள்ளூர் மக்கள் குமுறல்

நந்திவரம், ஜூன் 6–

ஆன்மிக ஸ்தலமான நந்திவரம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்து கூடுவாஞ்சேரி என்ற பெயரை முன்னிலைப்படுத்தி, வரலாற்றை திரிப்பதாக நந்திவரம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி - நகராட்சியில், 30 வார்டுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியாக இருந்த இப்பகுதி, கடந்த 2021ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதில், நந்திவரம் என்ற பெயரை மறைத்து, கூடுவாஞ்சேரி என்ற பெயரே முன்னிலைப்படுத்தப்படுவதாக நந்திவரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

நந்திவரத்தில் உள்ள, 1500 ஆண்டு பழமையான, தேவார பாடல் பெற்ற, நந்தீஸ்வரர் கோவிலை மையப்படுத்தியே இதற்கு நந்தீஸ்வரம் என்று பெயர் சூட்டப்பட்டது. நந்திவரத்தின் ஒரு பகுதியாகவே கூடுவாஞ்சேரி இருந்தது. மக்கள் தொகை அதிகரித்ததால், நந்திவரம், கூடுவாஞ்சேரி பகுதிகள் தனித்தனி ஊராட்சியாக பிரிக்கப்பட்டன.

கடந்த 1976ல், இவ்விரு ஊராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளில் முக்கியப்புள்ளிகளாக மாறினர். இதையடுத்து, நந்திவரம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யத் தொடங்கினர்.

தொடர்ந்து, அரசு பேருந்துகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கூடுவாஞ்சேரி என்ற பெயர் மட்டும் இடம் பெறத் தொடங்கி, தற்போது, அதுவே பிரதானமாகிவிட்டது.

இப்போதும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பகுதிக்கு தனித்தனியாகவே கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளனர். புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான நந்திவரம் என்ற பெயரை மீட்டெடுக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement