விளையாட்டு செய்தி// தேசிய ஜூனியர் ‘கிக் பாக்சிங்’ சாம்பியன்ஷிப் 51 பதக்கங்கள் வென்று தமிழகம் சாதனை
சென்னை: தேசிய ஜூனியர் ‘கிக் பாக்சிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி 19 தங்க பதக்கங்கள் உட்பட 51 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.
‘வாக்கோ இந்தியா கிக் பாக்சிங்’ கூட்டமைப்பு சார்பில், தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் நடந்தது. போட்டியில் நாடு முழுதும் இருந்து, 1,000 மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 24 சிறுமியர் உட்பட 61 பேர் பங்கேற்றனர். அவர்கள், ‘பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட்’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திறமையை நிரூபித்தனர்.
போட்டி முடிவில், 19 தங்கம்; 15 வெள்ளி; 17 வெண்கலப் பதக்கங்கள் என, மொத்தம் 51 பதக்கங்கள் கைப்பற்றி, தமிழக அணி பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
பஞ்சாப் அணி 32 தங்கம்; 12 வெள்ளி; 19 வெண்கலம் என 63 பதக்கங்களுடன் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா அணி 26 தங்கம்; 25 வெள்ளி; 17 வெண்கலம் என 68 பதக்கங்களுடன், இரண்டாவது இடத்தையும் கைப்பற்றின.
பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனையர், செப்., 18 முதல் 27 வரை நடக்க உள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.