இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 1653 காட்டு யானைகள் உயிரிழப்பு; மனித செயல்பாடுகளே காரணம்!

நமது சிறப்பு நிருபர்



இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை மனித தலையீட்டால் 1653 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்தது. மின் தாக்குதல், ரயில் மோதல்கள் மற்றும் வேட்டையாடுதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் என தெரியவந்துள்ளது.

உலகின் ஆசிய யானை இனத்தொகையில் கிட்டத்தட்ட 60% இந்தியாவில் வசிப்பதால், இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்தியாவில் மனித-யானை மோதல் தொடர்பாக இந்த ஆய்வை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும், டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனமும் இணைந்து நடத்தின.

யானைகளின் இறப்புகளுக்கு மின்சாரம் தாக்கி இறப்பதே முதன்மைக் காரணமாக உருவெடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 1,105 யானைகள் மின் தாக்குதலில் உயிரிழந்தன. ஒடிசா , கர்நாடகா, அசாம் , தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச மின்சாரத் தாக்குதல் மரணங்கள் பதிவாகியுள்ளன.

2009ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் ரயில் மோதல்களில் 225 யானைகள் உயிரிழந்தன. இதில் அசாமில் அதிகபட்சமாக 82 யானைகளும், அதைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் 62 யானைகளும் உயிரிழந்துள்ளன. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 79 யானைகள் விஷங்களை உட்கொண்டு உயிரிழந்துள்ளன. அதிகமாக அசாமில் 45 யானைகள் உயிரிழந்துள்ளன. 2வது ஒடிசாவில் 15 யானைகள் உயிரிழந்துள்ளன.

வேட்டையாடுதலில் 214 யானைகள் உயிரிழந்தன. இதில் ஒடிசாவில் அதிகபட்சமாக 66 யானைகள் உயிரிழந்ததாகப் பதிவாகியுள்ளது.அசாம் (27), கேரளா (24), மேகாலயா (23), கர்நாடகா (22) மற்றும் தமிழகம் (22) ஆகிய மாநிலங்களில் மீண்டும் மீண்டும் நிகழும் சட்டவிரோத வேட்டையாடுதல் சம்பவங்கள் நடப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

யானைகளுடனான மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது. 2009 முதல் 2025 வரை இந்தியாவில் யானைகள் வசிக்கும் 16 மாநிலங்களில் மொத்தம் 7,868 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் அதிகபட்சமாக 1,495 பேரும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 1,306 பேரும், ஜார்க்கண்டில் 1,205 பேரும், அசாமில் 1,161 பேரும் உயிழந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் பதிவான மொத்த மனித இறப்புகளில் கிட்டத்தட்ட 70% இந்த நான்கு மாநிலங்களிலுமே நிகழ்ந்துள்ளன.

ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஒப்பீட்டளவில் சிறிய யானை மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நடந்துள்ளன என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement