உலக சுற்றுச்சூழல் தினம் ; பள்ளிகளில் கொண்டாட்டம்

பொள்ளாச்சி: ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மழைநீரை சேமியுங்கள்; நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், மரங்கள் அதிகளவு நடவு செய்ய வேண்டும்; பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு, 300 புங்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். 6ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த, 50 மாணவர்கள், ஆயிரம் விதை பந்துகளை தயாரித்தனர். செம்மண், மாட்டுசாணம், தென்னை நார் கொண்டு மண் உருண்டைகள் பிடிக்கப்பட்டு, வேப்ப மரத்தின் விதைகள் வைக்கப்பட்டன.

அவற்றை இரண்டு நாட்கள் உலர வைத்து பக்குவப்படுத்தினால், மழை காலத்தில் சாலையோரங்களில் துாவினால், பறவையின் எச்சங்களில் இருந்து முளைப்பது போல புதிய நாற்றுகள் உருவாகும் என விளக்கப்பட்டது.

பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலமுருகன், ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பெற்றோர் சுடலைமுத்து, சம்பத் ஆகியோர் தேவையான பொருட்களை வழங்கினர்.

* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமையாசிரியர் சித்ரா, உதவி தலைமையாசிரியர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை, கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்து பசுமையாக மாற்ற அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து, ஒன்றிய அதிகாரிகள் இதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, அங்கு, 50க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Advertisement