5 துணை மின் நிலையங்களை செயல்படுத்த... எதிர்பார்ப்பு:ரூ.300 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, 5 துணை மின் நிலையங்கள் அமைக்கும் திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டங்களை செயல்படுத்தி, தொடரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, 300 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மின் கோட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை ஆகிய மூன்று மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன.
அந்த கோட்டத்தில், 3,54,436 வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. மேலும், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தவிர, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகளும் உள்ளன.
அவர்கள் அனைவருக்கும் மின்சாரம் வினியோகம் செய்வதற்காக, 3 கோட்டங்களில், 25 துணை மின் நிலையங்கள், 90க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வாயிலாக, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அசுர வளர்ச்சி
இதில், துணை மின் நிலையங்கள் அனைத்தும், 110 கே.வி., மின்சாரம் தாங்கும் வகையில் தான் அமைக்கப்பட்டு உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை நகரை ஒட்டி அமைந்துள்ளதால், ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் என, அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதிகரித்து வரும் கட்டடங்களுக்கு ஏற்ப, கூடுதல் மின்சாரம் வழங்க முடியாமல், அனைத்து துணை மின் நிலையங்களும் திணறி வருகின்றன.
கோடை காலங்களில் மின் பயனீட்டாளர்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல், மின் வாரிய அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்துார், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அனைத்தும், 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், அவற்றின் வலு குறைந்து, அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது.
இதனால், மின் தடை ஏற்பட்டு வருகிறது. துண்டிக்கப்பட்ட மின் கம்பியை ஒட்டு போட்டு இணைத்து, தொடர்ந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
ஒட்டு போட்ட மின் கம்பிகளை மாற்றாததால் தான், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் பயனீட்டாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும், உரிய பதில் கிடைக்காததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நேரங்களில், வினியோகிக்கும் மின்சார அளவு அதிகரித்தால், அதன் அழுத்தம் தாங்காமல், துணை மின் நிலையங்களில் மின் தடையும் ஏற்படுகிறது. இதன் காரணமாக, வீடுகளுக்கும், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், மின் வினியோகம் பாதிக்கிறது.
அலமாதியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் மோசூருக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
அங்குள்ள துணை மின் நிலையத்தி ல் இருந்து, திருவள்ளூர், திருத்தணி கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வழங்கப்பட்டு, அதன் பின்னரே நுகர்வோருக்கு மி ன்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்கு காரணம், திருவள்ளூரில் 230/11 கே.வி., மின்சாரம் கையாளும் துணை மின் நிலையம் இல்லாததே.
திருவள்ளூரில் சீரான மின்சாரம் வினியோகிக்க, கடந்த ஆட்சி காலங்களில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில், 15 ஏக்கர் பரப்பளவில், 230/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, முதல் கட்டமாக, 3.24 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் ஒதுக்கியது.
ஆனால், முழு அளவில் கட்டுமான பணியை நிறைவு செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அத்திட்டம் கிடப்பில் உள்ளது.
இத்திட்டம் நிறைவேறினால், அலமாதியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை, கனகவல்லிபுரத்திலேயே பிரித்து, இரண்டு கோட்டங்களுக்கும் மின்சாரம் வினியோகிக்க எளிதாக இருக்கும்.
திருவள்ளூர் மின்கோட்ட அலுவலகத்திற்காக, அரசு மருத்துவக் கல்லுாரி அருகில், 110 கே.வி., துணை மின் நிலையம், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அத்திட்டமும் இதுவரை தொடங்கவில்லை.
நிதி ஆதாரம்
அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ள காக்களூர், போளிவாக்கம் மற்றும் திருப்பாச்சூர் ஆகிய இடங்களில், 33/11 கே.வி., சிறு துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மாவட்ட மின் வாரிய துறையினர், தலைமை அலுவலகத்திற்கு கருத்துரு சமர்ப்பித்துள்ளனர்.
ஆனால், நிதி ஆதாரம் இல்லை எனக்கூறி, தமிழக மின் வாரியம் அத்திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டாமல், அலட்சியமாக செயல்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அசுர வள ர்ச்சி அடைந்து வரும் திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வினியோகம் அதற்கேற்றவாறு இல்லை.
கூடுதல் திட்டங்களை செயல்படுத்தினால் தான், தடையற்ற, சீரான மின் வினியோகம் கிடைக் கும்.
மாவட்டத்திற்கு அதிகளவில் தொழிற்சாலைகள் பெருகும்.
அதன் வாயிலாக, இம்மாவட்ட இளைஞர்களுக்கு, அதிகளவில் வேலை வாய்ப்பும் கிடைக்கும். மாவட்டமும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்.
இடவசதி இருந்தும், கனகவல்லிபுரம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், துணை மின் நிலையம் அமைக்காமல், மின் வாரியம் கிடப்பில் போட்டுள்ளது.
க டந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு, இந்த ஆட்சியிலாவது தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, கிடப்பில் உள்ள மின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் கோட்ட மின் வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும், 'மின் லோடு' அதிகரித்து வருகிறது. மணவாள நகர், ராமஞ்சேரி துணை மின் நிலையங்களில், அதிக அழுத்தம் காரணமாக, அவ்வப்போது மின்மாற்றிகள் வெடித்து விடுகின்றன.
இடம் தேர்வு
காக்களூர் தொழிற் பேட்டையிலும், அடிக்கடி மின்மாற்றிகள் வெடிப்பதால், மின்சாரம் தடைபட்டு, உற்பத்தி பாதிக்கிறது.
சீரான மின்சாரம் வழங்குவதற்காக, கனகவல்லிபுரம் கிராமத்தில், 230/11 கே.வி., துணை மின் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 110/11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளன.
மேலும், 3 இடங்களில் கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு, மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கருத்துரு அனுப்பி உள்ளோம்.
இதற்கு, 300 கோடி ரூபாய் வரை செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அந்த நிதியை ஒதுக்கீடு செய்தால் தான், அத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.