ரூ.2 கோடி ரொக்கம், 5 வீடுகள், 13 மனைகள்: அரசு பொறியாளர் வீட்டு ரெய்டில் சிக்கின

புவனேஸ்வர்: ஒடிஷாவில் அரசு பொறியாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் 2.40 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து அடுக்குமாடி வீடுகள், 13 வீட்டு மனைகளுக்கான ஆவணங்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநில பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் உதவி நிர்வாகப் பொறியாளர் வைகுண்ட நாத் பெஹரா. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன் தினம் அதிரடி சோதனையில் இறங்கினர். புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர், பாலிகுடா உட்பட வைகுண்ட நாத்துக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். வைகுண்ட நாத்தின் வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் 2.4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர, 5 பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் அவர் பெயரில் இருப்பதும் தெரிந்தது. அவற்றில் நான்கு புவனேஸ்வரில் கட்டப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புவனேஸ்வர் சுற்றுவட்டார பகுதிகளில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகள், 341 கிராம் தங்க நகைகள் மற்றும் 45 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1999ஆம் ஆண்டு வெறும் 6,000 ரூபாய் மாத சம்பளத்தில் இளநிலைப் பொறியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார் வைகுண்ட நாத்.

கடந்த 2016இல் உதவிப் பொறியாளராகவும், 2026 பிப்ரவரியில் உதவி நிர்வாகப் பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இருபது ஆண்டுகால அரசுப் பணியில், தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்துக் குவித்து, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement