சர்வாதிகாரி ஹிட்லரால் உத்வேகம் பெற்றேன்; தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

10


ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கும் படைக்கு சர்வாதிகாரி ஹிட்லரின் பெயர் வைத்ததற்கு, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக, சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதற்கு, 'ஹைட்ரா' என, முதல்வர் ரேவந்த் ரெட்டி பெயர் சூட்டினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஹைட்ரா என்பது சர்வாதிகாரி ஹிட்லருக்கு விருப்பமான வார்த்தை. பிறரை கொலை செய்யும் அவருக்கு நெருக்கமான குழு ஹைட்ரா என அழைக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து உத்வேகம் பெற்றே, நீர்நிலைகளை பாதுகாக்கும் படைக்கு அப்பெயரை வைத்தேன்' என, தெரிவித்திருந்தார். இதற்கு தெலுங்கானாவின் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி தன் சமூக வலைதள பக்கத்தில், 'ஹிட்லரின் அபாயகரமான மற்றும் அவசர கால மனநிலையை ரேவந்த் ரெட்டி வெளிப்படுத்தி உள்ளார்.

இதன் வாயிலாக, தன் கட்சித் தலைவர் ராகுலின் கருத்தை அவர் எதிரொலிக்கிறார். இந்த கருத்துக்கு அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். எமர்ஜென்சி காலம் முதல் மக்களின் குரலை காங்கிரஸ் ஒடுக்கி வந்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி தன் பதிவில், 'ஏழைகளின் வீடுகளை இடித்த ரேவந்த் ரெட்டி, ஹிட்லரைப் போல ஒரு சர்வாதிகாரி' என, விமர்சித்துள்ளது.

Advertisement