மாநகராட்சியில் 'லாபி' அலுவலர்களின் விசுவாசிகள் சுத்தி சுத்தி வர்றாங்க: பணியிட மாற்ற உத்தரவிலும் மறைமுக 'அரசியலா'

மதுரை: மதுரை மாநகாட்சியில் 'லாபி' அலுவலர்களின் 'ஆசி'யால் 40 சதவீதம் அலுவலர்கள் மெயின் அலுவலகத்திலேயே பல ஆண்டுகளாக பணியை தொடர்வதாக மண்டல அலுவலகங்களில் பணியாற்றுவோர் ஆதங்கத்தில் உள்ளனர்.

மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் கமிஷனர், துணை கமிஷனர்கள், தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள், வருவாய், நகரமைப்பு, நகர்நலம், பொது நிர்வாகம் என பல பிரிவுகளில் உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதுதவிர 5 மண்டல அலுவலகங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர்.

அரசு அலுவலர் விதிப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரே இடத்தில் பணியாற்றினால் அவரை மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் 'லாபி' அலுவலர்கள் சிலரின் 'ஆசி' பெற்ற 40 சதவீதம் பேர், மாநகராட்சி மெயின் அலுவலகத்திலேயே வெவ்வேறு பிரிவுகளுக்குள் பணியிட மாற்றம் பெற்று, வேறெங்கும் செல்லாமல் காலத்தை ஓட்டுகின்றனர்.

'ஆசி' இல்லாதவர்கள் மண்டல, வார்டு அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த 'மறைமுக அரசியலால்' பலர் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னையை எந்த கமிஷனர் வந்தாலும் அவர் கவனத்திற்கு சென்று விடாமல் இந்த 'லாபி' அலுவலர்கள் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அலுவலர்கள் கூறியதாவது: கமிஷனர், தலைமைப் பொறியாளர் (சி.இ.,), நகரமைப்பு, நகர்நலம், பொது நிர்வாகம், வருவாய் என முக்கிய அலுவலகங்களில் இந்த 'லாபி' அலுவலர்கள் உள்ளனர். இவர்களை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 'பவர் சென்டர்' ஒருவர் ஒருங்கிணைக்கிறார். இவர்களின் 'விசுவாச' அலுவலர்களே முக்கிய பிரிவுகளில் பணியில் உள்ளனர்.

இவர்களுக்கு கட்டுப்படாத அலுவலர்கள் மண்டலங்களுக்கு மாற்றப்படுகின்றனர். விசுவாசிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மெயின் அலுவலகத்திலேயே பணியில் இருக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது என்ற விதிக்காக மெயின் அலுவலகத்திலேயே பல பிரிவுகளில் இவர்களுக்கு 'டிரான்ஸ்பர்' கிடைக்கும்.

இதுபோல் ஒப்பந்த கணினி பணியாளர்கள் பலர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். இதனால் ரகசியம் காப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சி.இ., அலுவலகத்தில் சிலர் எட்டு ஆண்டுகளாக பணியில் தொடர்கின்றனர். அவர்களிடம் நிரந்தர பணியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களும் பணிந்து செல்லும் சூழல் உள்ளது. இந்த 'லாபி'களின் 'மறைமுக அரசியலை' கமிஷனர் கவுரவ் குமார் கண்டுபிடித்து வரும் காலத்தில் பாரபட்சமற்ற பணியிட மாற்றத்திற்கு வழிகாண வேண்டும் என்றனர்.

Advertisement