தினமலர் செய்தி எதிரொலி: சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம் 

விருதுநகர்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் மாற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு சாய்வுத்தளம் அமைக்கும் பணிகள் துவங்கியது.

விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலகத்தின் பக்கவாட்டு வாயில் வழியாக சென்றால் மாற்றத்திறனாளிகள் அலுவலகம் வரும். இதற்காக அங்கு சாய்வுத்தளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் திறந்ததால் தரைத்தளத்தில் செயல்பட்ட ஏ, பி, சி, இ, ஐ ஆகிய பிரிவுகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில் தரைத்தளத்தில் அப்பிரிவுகள் இருந்த இடத்திற்கு தற்போது மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக பழைய கலெக்டர் அலுவலகத்தின் முதன்மை வாயில், இரண்டாம் வாயில்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துகின்றனர்.

அலுவலகம் மாற்றும் போதே சாய்வுத்தளம் அமைக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்காததால் ஜூன் 4ல் தினமலர் நாளிதழில் சாய்வுத்தளம் அமைக்க கோரி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 2ம் வாயிலில் சாய்வுத்தளம் கட்டும் பணி துவங்கியது.

Advertisement