திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு

5

சென்னை: திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில் ரூ.2,100 கோடி மதிப்பிலான நான்கு வழி மேம்பாலச் சாலைத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு, கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 13.3 கி.மீ தொலைவிற்கு ரூ.2,100 கோடி மதிப்பிலான நான்கு வழி மேம்பாலச் சாலைத் திட்டத்திற்கான டெண்டர் அவசர அவசரமாக விடப்பட்டுள்ளது. இதில், முறைகேடுக நடந்துள்ளதாகவும், திட்டச் செலவு அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

அதாவது, இந்த 4 வழி மேம்பால சாலைத் திட்டத்தின் சராசரி கட்டுமானச் செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.157.89 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரவாயல் - சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டத்தில் முன்மொழிந்துள்ள ஆறு வழி மேம்பாலச் சாலையின் சராசரிச் செலவே ஒரு கிலோமீட்டருக்கு ரூ.147 கோடியாகும்.

எனவே, திமுக ஆட்சியில் அவசர அவசரமாக திட்டமிடப்பட்டு, டெண்டர் விடப்பட்ட ரூ.2,100 கோடி மதிப்பிலான இந்த மேம்பாலச் சாலத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களின் டெண்டர் நடைமுறைகள் தற்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. திருவான்மியூர் - உத்தண்டி திட்டத்தின் செலவு மிக அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் மற்றும் சில திட்டங்களிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட முறையில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படியே திருவான்மியூர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்தாலும், முந்தைய திமுக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தொடர வாய்ப்பில்லை என்று தெரிகிறது," என்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெண்டர்கள் கோரப்பட்டதில் இருந்தே இத்திட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், போபாலைச் சேர்ந்த பில்ட்கான் என்ற உள்கட்டமைப்பு நிறுவனம், நிதி மதிப்பீட்டின் போது இறுதித் தேர்வான நிறுவனத்தை விட தாங்கள் சுமார் ரூ.500 கோடி குறைவாகக் குறிப்பிட்டிருந்தும் தங்களது டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இதனை ஏற்ற உயர்நீதிமன்றம், பில்ட்கான் நிறுவனத்தின் கோரிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவைப் பெற்ற 10 நாட்களுக்குள் தமிழக நெடுஞ்சாலைக் கழகம் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இருப்பினும், பில்ட்கான் நிறுவனம் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்குள் தனது கோரிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரருக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது.

Advertisement