சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––

சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்திற்குள் உள்ள, பாரதிய கதர் கிராமோதய சங்கத்தின் ஒரு பிரிவான, ‘கிராமோதயா அங்காடி’யின் மேலாளர் மதியழகன்:

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு இந்த அங்காடி இயங்குகிறது. ‘கிராமோதயா அங்காடி’ உருவான கதை, ஒரு பெரிய பயணம் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த 1989ல், எங்களிடம் இருந்தது, ஒரே ஒரு மூன்று சக்கர சைக்கிள் மட்டும் தான். அந்த வண்டியை தள்ளியபடியே, ஐ.ஐ.டி., ஊழியர்கள் குடியிருப்புக்கு சென்று பாரம்பரியமும், ஆரோக்கியமும் கலந்த பொருட்களை விற்பனை செய்வோம்.

அப்படி சிரமப்பட்டு தான், இந்த பெயரை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். கிராமோதயாவின் சிறப்பம்சமே, பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தான். பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு தான், இங்கு முன்னுரிமை தருகிறோம். அதேபோன்று, இங்கு விற்பனையாகும் பெரும்பாலான பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் தான். அதாவது, பெண்களே இந்த நிறுவனத்தின் முக்கியமான உற்பத்தியாளர்கள் என்று சொல்லலாம்.

துாத்துக்குடி வாழைப்பழ அல்வா, ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, மார்த்தாண்டம் தேன், பெரம்பலுாரில் இருந்து வரவழைக்கப்படும் வல்லாரை, துாதுவளை இனிப்புகள், பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் பதநீரில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் என, அந்தந்த பகுதிகளின் பிரபலமான உணவுகள், இங்கு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நாங்கள் கொடுக்கும் பாரம்பரியமான, ஆரோக்கியமான பொருட்கள், எல்லா இடங்களிலும் கிடைக்காது. இன்னொரு முக்கியமான விஷயம், பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, காகித பைகளில் மட்டும் தான் கொடுப்போம்.

இப்போது, இந்த மாதிரி குடிசை தொழில்களில் உழைப்பதற்கு எவரும் பெரிதாக விரும்புவதில்லை. அதிக லாபமும் கிடையாது; அதனால், ஆட்கள் தட்டுப்பாடும் அதிகமாகவே இருக்கும்.

நான் தனிப்பட்ட முறையில் விவசாயம் செய்கிறேன். நம்மால், 10 பேரின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற சந்தோஷம் தான், என்னை இத்தனை ஆண்டுகள் இங்கு வேலை பார்க்க வைத்திருக்கிறது. அடுத்து, வாடிக்கையாளரின் சேவையை மேம்படுத்துவதற்காக, புகார் பெட்டி வைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.

***

Advertisement