82 சதவீத குடும்பத்திற்கு குழாய் வழி குடிநீர் வசதி; மத்திய அரசு தகவல்
புதுடில்லி: நம் நாட்டில் குழாய் வழி குடிநீர் வசதி பெறும் கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை, 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 82 சதவீத குடும்பத்தினருக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை, குழாய் இணைப்பு மூலம் வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் மத்திய அரசு சார்பில், 'ஜல் ஜீவன்' திட்டம் 2019ல் துவங்கப்பட்டது. முழு இலக்கை எட்டும் வகையில், இந்தத் திட்டம் வரும் 2028ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: நம் நாட்டில் மொத்தம் உள்ள 19.35 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், இதுவரை 15.83 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு, அதாவது, 81.87 சதவீதம் குடும்பத்தினருக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2020 - 21 மற்றும் 2026 - 27 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 488 சதவீதம் அதிகரித்து, 67,670 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 'ஹர் கர் ஜல்' எனப்படும் ஒவ்வொரு வீட்டிலும் குழாய் நீர் என்ற பிரசாரத்தின் கீழ் 2.77 லட்சம் கிராமங்கள், 100 சதவீத குழாய் வழி குடிநீர் வசதியை எட்டியுள்ளது.
முன்னுரிமை மாவட்டங்களின்படி, கடந்த, 2019ல் குழாய் வழி குடிநீர் வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, 23.62 லட்சமாக இருந்த நிலையில், கடந்த மாத நிலவரப்படி 2.20 கோடியாக அதிகரித்துள்ளது. அதுவே வட்டார அளவில், 1.11 கோடி குடும்பங்கள் இந்த இணைப்பை பெற்றுள்ளன.
இதேபோல் குழாய் வழி குடிநீர் இணைப்பு கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த 2019ல் 29,711 ஆக இருந்த நிலையில், கடந்த மாத நிலவரப்படி, 9.23 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் இந்த எண்ணிக்கை, 15,464ல் இருந்து 9.66 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுதவிர, கிராம ஊராட்சிகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் குழாய் வழி குடிநீர் இணைப்பு வசதி 3.93 லட்சம் நிறுவனங்களை சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பது அதிகரித்துள்ளதால், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறைந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.