ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே தர வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு

5

சென்னை: 'பெட்ரோல் பங்க்குகளில், ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு, ஒரு நாளில் 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது' என, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. பல நாடுகளில் எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டு வருவதுடன், அவற்றை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நம் நாட்டில் மானிய விலையில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசலை விற்பதால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது. இருப்பினும், சிலர் பீதி காரணமாக பெட்ரோல், டீசலை அதிகளவில் வாங்கி, இருப்பு வைத்து வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வினியோகத்தை ஒழுங்கு படுத்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தொழில் துறையினர்,தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இதன்படி, மொத்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல், டீசலை, பங்க்குகளில் இருந்து வாங்கக்கூடாது. அவர்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் டீசலை, வாகனங்களில் மட்டுமே நிரப்ப வேண்டும் .

ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு வாகனத்துக்கு, ஒரு நாளில் 200 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது. அந்த டீசலை மறு விற்பனை செய்யக்கூடாது.

இந்த கட்டுப்பாடுகளை பெட்ரோல் பங்க்குகள் கடைப்பிடிப்பதை, எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.


@block_Y@தொழில் துறை முடங்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:
அரசு, தனியார் மருத்துவ மனைகளில் மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான டீசல், அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் இருந்து லாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்தச் சூழலில், மொத்த டீசல் கொள்முதல் இனி பெட்ரோலிய நிறுவனங்கள் வாயிலாக நடக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்திருப்பதால், அவசர தேவைக்கு உடனடியாக டீசல் வாங்க முடியாத சூழல் மருத்துவமனைகளுக்கு ஏற்படும்.

இதனால், முக்கியமான அறுவை சிகிச்சை சமயங்களில், டீசல் இல்லாமல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனால், பெரும் விபரீதம் ஏற்படலாம். மருத்துவ துறை கட்டமைப்புகளான அவசர சிகிச்சை மையங்கள், முழு உடல் பரிசோதனை மையங்கள், ரத்த வங்கிகள், பார்மாசூட்டிகல் போன்ற துறைகளுக்கும் இக்கட்டான சூழல் ஏற்படும்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீரேற்றும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நகராட்சி, மாநகராட்சி உள்கட்டமைப்புகளின் அன்றாட பணிகள் ஸ்தம்பிக்கும்.

கட்டுமான உபகரணங்கள், சுரங்க இயந்திரங்கள், சாலை அமைக்க உதவும் உபகரணங்கள், தொழிற்சாலை ஜெனரேட்டர்கள், நீர்ப்பாசன கருவிகள் போன்ற ராட்சத வடிவிலான இயந்திரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தி செல்ல முடியாது. குறிப்பாக கட்டுமானம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறைகளின் நடவடிக்கைகள் அடியோடு முடங்கலாம். இவ்வாறு எச்சரித்துள்ளனர்.block_Y

Advertisement