12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் மக்கள் சேவையாற்றிய பிரதமர் மோடி

34

நமது நிருபர்



பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவையாற்றி வருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இதே நாளில்தான் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 12 ஆண்டுகளில் ஏழைகளின் நலன் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமாவதை நாடு முதன்முறையாகக் கண்டுள்ளது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்குவது, நாடு முழுவதும் 90க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், 140க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைப்பது, 4 கோடிக்கும் அதிகமான ஏழைக்குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவது, 1.45 லட்சம் கிலோமீட்டர் சாலைகள், 3,000 கி.மீ நவீன விரைவுச் சாலைகளை அமைப்பது என ஏராளமாக செய்யப்பட்டு உள்ளது.

50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதி மற்றும் 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவது, இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவது என இத்தகைய பணிகளில் பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல், அயராத அர்ப்பணிப்புடன் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார்.

தலைமையின் நோக்கம் நேர்மையானதாகவும், இலக்கு நாட்டின் நலனை மையமாகக் கொண்டதாகவும், அர்ப்பணிப்பு முழுமையானதாகவும் இருக்கும்போது மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகின்றன. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

அதேபோல் கடந்த 12 ஆண்டுகால சேவையில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆகியவை பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: குறைகளைத் தீர்ப்பதற்கும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது.நெருக்கடிச் சூழ்நிலைகளுக்குத் திறம்படப் பதிலளித்துள்ளது. உக்ரைன், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் மோதல்கள் ஆகியவை சில உதாரணங்கள்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. பிற நாடுகளில் இந்தியக் கலாசாரத்தை ஊக்குவித்து, நமது பாரம்பரியம் மற்றும் மரபுகள் மீதான மதிப்பை மேம்படுத்தியது.

வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் செல்லும் இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 44 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மத்திய அரசு திறந்து இருக்கிறது. இந்திய ராஜதந்திரம் நாட்டிற்காக 24 மணி நேரமும் செயல்படுகிறது. இன்று இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், வலுவான பெருமித உணர்வுடனும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கின்றனர். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Advertisement