ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் தரையில் வீணாகி கிடக்கும் அரிசி: நடவடிக்கை அவசியம்

விருதுநகர்:விருதுநகருக்கு சரக்கு ரயில்களில் வரும் அரிசியை லாரிகளில் மாற்றி ஏற்றும் போது அதிகமாக வீணாகி ரோட்டில் கொட்டி கிடக்கிறது. உணவுப்பொருள் வீணாவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்குவதற்காக மத்திய அரசு வழங்கும் அரிசியை சரக்கு ரயில்களில் கொண்டு வந்து விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரசின் கோடவுன்களுக்கு லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல சரக்கு ரயிலில் வந்த அரிசியை லாரிகளில் மாற்றுப்பணிகள் நடந்தது. ஆனால் வழக்கத்தை விட அதிகப்படியான அரிசி லோடு ஏற்றும் போது தரையில் விழுந்தது. இதனால் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ரயில், லாரிகளில் இருந்து சிதறிய அரிசி முழுவதும் தரையில் விழுந்து நிறைந்து உள்ளது. மத்திய அரசு வழங்கும் அரிசி பணியாளர்களின் கவனக்குறைவால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசி வீணாவதை தடுக்க தார்பாய் தரையில் விரித்து அரிசி லோடு ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்ற வேண்டும். அதன் பின் தார்பாயில் சிதறிய அரிசியை சேமித்து கோடவுன்களுக்கு கொண்டு சென்று மீண்டும் சுத்தம் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். எனவே விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அரிசி வீணாவதை தடுக்கும் நடவடிக்கை அதிகாரிகள் உடனடியாக செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement