மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தியதாக 'மிஸஸ் கேரளா' போட்டியாளரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பேங்காக்கில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த 28 வயதான மாடலும், 'மிஸஸ் கேரளா' அழகுப் போட்டியின் முன்னாள் போட்டியாளருமான ஹர்ஷா சன்னியை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர் சட்டவிரோதமாக வீரியமிக்க ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது; ஹர்ஷா சன்னியின் ராலி பையிலிருந்து சீலிடப்பட்ட12 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பாக்கெட்டுகளைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பச்சை நிறத்திலான ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முதற்கட்ட சோதனை கருவி மூலம் அதைச் பரிசோதித்த போது, அது உலர்ந்த பூக்கள் மற்றும் மொட்டுகளின் வடிவிலான கஞ்சா என்பதும், இது பொதுவாக 'ஹைட்ரோபோனிக் வீட்' என்று அழைக்கப்படும் வீரியமிக்க போதைப்பொருள் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 11.82 கோடிக்கும் அதிகம், இவ்வாறு அவர் கூறினர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்பிளனேடு நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

Advertisement