முன்னாள் எம்.எல்.ஏ. நினைவஞ்சலி கூட்டம்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியின், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, அஞ்சலி செலுத்தப்பட்டது. 



மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ., நடராஜ் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மறைந்த குணசேகரன் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முத்துக்குமார், மருத்துவ அணி இணை செயலாளர் பூமிஷ், பகுதி செயலாளர்கள் தினேஷ், கண்ணன், ஹரிஹரசுதன் உள்ளிட்ட நிர்வாகிகள், மலர்துாவி மலரஞ்சலி செலுத்தினர்.



மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ‘‘இயக்கத்தில், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய குணகேரன், அ.தி.மு.க.,வுக்கு சோதனை வந்த போதெல்லாம், கட்சி பணியே முழு நேர பணியாக கொண்டு, இயக்கத்தை வளர்த்தார். அவர் இருந்திருந்தால், தெற்கு தொகுதியில், அதிக ஓட்டுவித்யாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். அவரது நினைவு நாளில், முழு அர்ப்பணிப்புடன் கட்சிப்பணியாற்றி, அ.தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று உறுதியேற்போம்,’’ என்றார்.



* மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனுக்கு, வாலிபாளையம் பொதுமக்கள் சார்பில், முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் பூமிஷ் தலைமை வகித்தார். பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் குணசேகரன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.





Advertisement