ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு

1

கான்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்று கொண்டிருந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு (ஜூன் 11) கான்பூரிலிருந்து ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மோகன் பகவத் டில்லி சென்று கொண்டிருந்தார். பிரோசாபாத் மாவட்டத்தைக் கடந்து, மக்கன்பூர் நிலையத்தை தாண்டி செல்லும் போது, அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியின் ஜன்னல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மோகன் பகவத் இருந்த அந்த பெட்டியின் ஜன்னலின் வெளிப்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், துண்ட்லா சந்திப்பின் வெளிப்பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். அதன்பிறகு, மீண்டும் ரயில் டில்லி நோக்கிப் புறப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆக்ரா மண்டல ஏடிஜிபி எஸ்கே பகத் உள்ளிட்டோர் பிரோசாபாத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட நபரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement