வெற்றியுடன் துவங்கியது மெக்சிகோ; சொந்த மண்ணில் அபாரம்


மெக்சிகோ சிட்டி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து 23வது சீசன் தொடரை மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் தொடர் நேற்று நள்ளிரவு தொடங்கியது. துவக்க விழாவையொட்டி, மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடந்த கோலாகல கலைநிகழ்ச்சிகள் ரசிகர்களின் கண்களை கவர்ந்தன.

கொலம்பிய பாடகி ஷகிரா மற்றும் நைஜீரியாவி்ல் பாடகர், பர்னா பாயுடன் இணைந்து டாய் டாய் என்ற பாடலை பாடி அசத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில் மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய மெக்சிகோ போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜூலியன் கோல் கணக்கை துவக்கினார். இதைத்தொடர்ந்து முதல் பாதியில் தென் ஆப்ரிக்கா பதில் கோல் அடிக்க போராடியது.ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை.

இந்த சூழலில், 2வது பாதியில் 50வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் யாயா சிதோல் பதில் கோலை அடித்தார். அதன்பிறகு, 67வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜிமேனஷூம், 84வது தென் ஆப்ரிக்க வீரர் தெம்பாவும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

இதனால் ஆட்டத்தின் நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலை வகித்தன. எனவே வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. 92வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் சீசர் மோன்டஸ் அணிக்கான வெற்றி கோலை அடித்தார். இதன்மூலம், 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.

சொந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே மெக்சிகோ வெற்றி பெற்றது, உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொரு போட்டியில் செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது. சம பலத்துடன் மோதிய இரு அணிகளும் முதல் பாதியில் எந்த கோலையும் அடிக்கவில்லை. 2வது பாதியில் தான் ஆட்டம் சூடுபிடித்தது. போட்டியின் 59வது நிமிடத்தில் செக் குடியரசின் லடிஸ்லெவ் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.


இதையடுத்து, 67வது மற்றும் 80வது நிமிடங்களில் தென் கொரியா வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் 2-1 என்ற கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது.

Advertisement