வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

20


வாஷிங்டன்: இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டாம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். ஈரான் கடும் தாக்குதலுக்கு உள்ளானதால்தான் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஈரானுடனான போருக்கு நாங்கள் ஒரு சிறந்த தீர்வை எட்டியுள்ளோம். நான் ஒரு காலக்கெடுவைச் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.


ஈரான் மறுப்பு




அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தம் குறித்து உடன்பாடு எட்டியுள்ளதாக டிரம்ப் கூறிவந்தபோதிலும், ஈரான் அதை மறுத்ததுடன், இதுவரை இறுதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறியது.

பேச்சுவார்த்தைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், இதுவரை ஓர் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தது. ஈரான் அறிவிக்கும் வரை, இவ்விஷயம் தொடர்பாக டிரம்ப் வெளியிடும் எந்தவொரு செய்தியும், அவரது முந்தைய செய்திகளைப் போலவே கருதப்பட வேண்டும்," என ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement