கமுதி அரசு மருத்துவமனையில் 51 இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை

கமுதி: கமுதி அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 51 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மருத்துவ குழுவினரை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பாராட்டினார்.

கமுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக 14 இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 37 முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது கிராமப்புற வட்டார அளவிலான அரசு மருத்துவமனையின் பெரிய சாதனை. கமுதி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறுவை சிகிச்சை முடித்து குணமடைந்த நோயாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது டாக்டர்கள், பணியாளர்கள் வழங்கிய சிகிச்சைகளாலும், கவனிப்பிலும் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம். இதனால் விரைவில் குணமடைந்ததாகவும் நோயாளிகள் கூறினர்.

மேலும் கமுதி வட்டார டாக்டரும், எலும்பியல் டாக்டருமான பிரபாகரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நடராஜன் மற்றும் தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமிஷ் ராம்நாத் இணைந்து மருத்துவமனை குழுவினரின் சேவையையும், கிராமப்புற மக்களுக்கு உயர்தர எலும்பியல் சிகிச்சை கிடைக்க செய்ததற்காக பாராட்டினர்.

–––

Advertisement