குழந்தை திருமண தடுப்பு குழு கூட்டம் மாதந்தோறும் நடத்த உத்தரவு
தேனி, ஜூன் 10-கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழந்தை திருமண தடுப்பு குழு கூட்டம் மாதந்தோறும் நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. எஸ்.பி., சினேகப்பிரியா முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மதியழகன், சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., சுருளிவேல், போலீசார், தொண்டு நிறுவன நிர்வாகிகள், திருமண மண்டபம், அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
மண்டபங்களில் திருமணத்திற்கு பதிவு செய்யும் போது மணமகன் வயது 21, மணமகள் வயது 18 இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான மணமக்கள் கல்வி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழந்தை திருமணம் தடுப்பு குழு கூட்டம் மாதந்தோறும் நடத்தி குழந்தை திருமணம் நடைபெறவில்லை என உறுதி செய்ய வேண்டும். குழந்தை திருமணம் நடந்தால் பொதுமக்கள் 1098 என்ற எண் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அறிவுறுத்தினர்.