பா.ஜ.,வை ஆட்சியில் ஏற்றிப் பாருங்களேன்!

6

கி.சந்தானகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., டில்லி தலைமைகளை நேரடியாக சந்தித்து, முறைப்படி விளக்கம் அளித்து, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை.

கட்சி நிதியை, 'சுவாகா' செய்தபடி, 'ஏசி' அறைக்குள் உட்கார்ந்து, வெறும் அறிக்கை விடும் அரசியல்வாதியாக இருக்க அவர் விரும்பவில்லை; அதனால், தனக்கான இலக்கை நோக்கி பயணப்பட, அவர் வெளியேறி விட்டார்.

இதில், குற்றம் என்ன இருக்கிறது?

உடனே, சில பா.ஜ., தலைவர்களும், அவர்களுக்கு, 'ஜால்ரா' போடுவோரும் அண்ணாமலையை வசைமாறிக் கொண்டிருக்கின்றனர்.

'அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுத்தனர்; 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்காக செலவு செய்தனர்' என்கின்றனர்.

மத்திய இணை அமைச்சர் முருகன் வேல் யாத்திரை சென்றாரே... தன் சொந்தக் காசை செலவு செய்து தான் சென்றாரா?

தமிழிசை, நயினார், வானதி சீனிவாசன் எல்லாம் தங்கள் கைப்பணத்தை போட்டு தான், கட்சி வேலைகளை செய்கின்றனரா?

கட்சியை வளர்க்க செலவு செய்தனர்; அண்ணாமலையும் நடையாய் நடந்து கட்சியை வளர்த்தார். இதில் சொல்லிக் காட்ட என்ன இருக்கிறது?

'அண்ணாமலையால் பா.ஜ., பெரிதாக பயனடையவில்லை; அவர் ஒரு துரோகி' என்கிறார், முன்னாள் பா.ஜ., தலைவி தமிழிசை.

சொந்தக் காலில் நிற்க துணிவு இல்லாமல், அ.தி.மு.க.,வின் தோளில் ஏறி, அதன் வாயிலாக பதவிகளை அடையத் துடிப்பவர்களுக்கு, அண்ணாமலையின் உழைப்பு எப்படி தெரியும்?

இரண்டு முறை பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, பா.ஜ.,வின் ஓட்டு வங்கியை எத்தனை சதவீதம் உயர்த்தினார்?

'தாமரை மலரும்; மலர்ந்தே தீரும்' என்று உரக்க கூறினால், தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமா?

அ.தி.மு.க.,வின் தோள்களில் ஏறி, சொகுசாக வெற்றி பெற நினைத்ததை தவிர, பா.ஜ., ஓட்டு வங்கியை உயர்த்த ஆற்றிய களப்பணி என்ன?

அண்ணாமலையால், பா.ஜ., வளரவில்லை என்றால், 2024 பார்லிமென்ட் தேர்தலில், ஓட்டு இயந்திரம் தாறுமாறாக ஓடி, 3 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு வங்கியை, 11 சதவீதமாக மாற்றிவிட்டது போலும்!

அண்ணாமலை விலகியதால், பா.ஜ.,விற்கு இழப்பில்லை எனும் போது, ஆளாளுக்கு ஒப்பாரி வைப்பது ஏன்?

நீங்கள் தான், 'மிக்சர்' தின்னுவதில் மிகச் சிறந்த தலைவர்கள் ஆயிற்றே... தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் பா.ஜ.,வை ஏற்றிக் காட்டுங்களேன்!

கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி எப்போது?



ஆர்.சுகுமாறன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை இதற்கு முன் ஆண்ட கட்சிகளும் சரி; தற்போது, ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியும் சரி... மின்கட்டணம் என்ற பெயரில், நுகர்வோர் தலைகளை மொட்டையடித்து, கட்டணக் கொள்ளை நடத்தி வருகின்றன.

பொதுவாக, தனியார் டாக்சியில் ஓர் இடத்துக்கு பயணிக்கிறோம் என்றால், புறப்படும் போது மொபைலில் பயணக் கட்டணம், 200 ரூபாய் என்று காட்டிய நிலையில், இறங்கும் இடத்தில் அந்த தொகையை வாங்க மறுத்து, டிரைவர், 600 ரூபாய் கேட்டால் எப்படி இருக்கும்?

அதுபோன்று தான், தமிழக அரசு, மின் வாரியம் வாயிலாக வசூலிக்கும் மின் கட்டணமும் உள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இனி மாதம் மாதம் கணக்கெடுத்து, மின் கட்டணம் வசூலிப்போம்' என்று வாக்குறுதி கொடுத்து, மக்களிடம் ஓட்டுகளை பெற்று, ஆட்சிக்கு வருகின்றன.

ஆட்சியில் அமர்ந்த பின்போ, அது குறித்து மூச்சே விடுவதில்லை.

அரசியல்வாதிகளின் இந்த பித்தலாட்டம் குறித்து, எவராவது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து, இந்த கட்டணக் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்!



கொள்கை அரசியலே தேவை!



எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்த ு அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ.,வில் அண்ணாமலையின் வரு கை, அக்கட்சியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திராவிட கட்சிகளை ஒதுக்கி, புதிய இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் செயல்பட்டார்.

ஆனால், பா.ஜ., டில்லி தலைமையும், தமிழக மூத்த தலைவர்களும் தமிழகத்தின் எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல், திராவிட கட்சிகளின் பாணியிலான அரசியல் நகர்வுகளையே விரும்பினர்.

மேலும், பா.ஜ., தலைமைக்கும் டில்லி ஆட்சி அதிகாரமே பிரதானமாக இருக்கிறதே தவிர, தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை.

இதை புரிந்து கொண்டதால் தான், தன் கொள்கைக்காக துணிந்து வெளியேறி புதிய இயக்கம் கண்டுள்ளார், அண்ணாமலை.

இன்று பெரிய அளவில் இளைஞர்கள், அவர் பின்னால் அணிவகுத்திருப்பது, தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பதன் அறிகுறியாகவே தென்படுகிறது.

ஆனால், இந்த, 'இளைஞர் சக்தி'யின் முக்கியத்துவத்தை சற்றும் உணராத, அ.தி.மு.க., அரசியல் களத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், சுயநலப் போக்கை கடைப்பிடிப்பதால், அ.தி.மு.க.,வின் எதிர்காலமே கேள்விக்குறியாகி, காலப்போக்கில் அது ஒரு, 'லெட்டர் பேடு' கட்சியாக மாறி விடுமோ என்றே நினைக்க வைக்கிறது.

​இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் என்பது, தி.மு.க., - த.வெ.க., மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆகிய மூன்று முனைகளை நோக்கியே சுழலப் போகிறது.

கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற உதிரிக் கட்சிகள், இந்த மூன்று சக்திகளுக்குப் பின்னால் தான் அரசியல் செய்ய வேண்டிய சூழல் உருவாகும்!

தனித்துவமான சித்தாந்தம் ஏதுமின்றி, திராவிடக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளையே த.வெ.க., பின்பற்றி வருவதால், எதிர்காலப் போட்டி என்பது, தி.மு.க., - த.வெ.க., மற்றும் அண்ணாமலையின் கட்சி என்ற இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலாகவே இருக்கும்.

திராவிட சித்தாந்தத்தை ஆதரிப்போர், தி.மு.க., - த.வெ.க.,வையும், மாற்று சித்தாந்தம் வேண்டுவோர் அண்ணாமலையின் கட்சியையும் தேர்ந்தெடுப்பர் என்ற நிலையில் தான், தேர்தல் களம் இருக்கப் போகிறது.

எதுவாக இருந்தாலும், அது குடும்ப அரசியலாக மாறாமல், கொள்கை அரசியலாக இருக்க வேண்டும் என்பதே, நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு!

Advertisement