நகர்ப்புற பெட்ரோல் பங்க்குகளில் எத்தனால் சேமிக்க வசதியில்லை: டீலர்கள் கவலை

2

புதுடில்லி: 'மத்திய அரசு, 'இ - 85, இ - 100' என்ற இரு புதிய எத்தனால் கலப்பு பெட்ரோலை ஊக்குவித்து வரும் நிலையில், முக்கிய நகர்ப்புற பெட்ரோல் நிலையங்களில் அவற்றை சேமித்து வைக்க போதிய வசதி இல்லை' என, பெட்ரோல் பங்க் டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு



கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடும் அன்னிய செலாவணியை குறைக்க பெட்ரோலில், எத்தனால் கலக்கும் திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப் படுகிறது. இது, 'இ - 20' பெட்ரோல் என்றழைக்கப்படுகிறது. இந்த எத்தனால், கரும்பு பாகு கழிவு மற்றும் சோளம், அரிசி, சேதமடைந்த தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனால் கலப்பு பெட்ரோல் சுற்றுச் சூழல் மாசையும் குறைக்க கூடியது.

இந்நிலையில், பெட்ரோலில் எத்தனால் கலப்பை, 85 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க துவங்கியுள்ளது.

அதற்கு ஏற்ற பைக் மற்றும் கார்கள் தயாரிப்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. சமீபத்தில் ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம், 'இ - 85' பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகளை அறிமுகம் செய்தது.

அதே போல், மாருதி சுசூகி நிறுவனமும், 'இ - 85'ல் இயங்க கூடிய, 'வேகன் ஆர்' காரை அறிமுகப்படுத்தியது.

விரைவில் இவை சந்தைக்கு வர உள்ளன. தலைநகர் டில்லியில், 'இ - 85' பெட்ரோலின் முதல் வினியோக நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது.

கூடுதல் பாதுகாப்பு



'நாடு முழுதும், முதல் கட்டமாக, 48 பெட்ரோல் நிலையங்களில், 'இ - 85' எத்தனால் கலப்பு பெட்ரோல் வினியோகம் துவங்கும்' என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதை, 2027ம் நிதியாண்டிற்குள் 5,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உட்பட, நாட்டின் பெருநகரங்களில் உள்ள, நகர்ப்புற எரிபொருள் வினியோக நிலையங்கள், பெட்ரோல், டீசல் சேமிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவை. காலப்போக்கில் சி.என்.ஜி., மின்சார சார்ஜிங் கட்டமைப்புகள் கொண்டு வரப்பட்டன.

தற்போது, 'இ - 85' 'இ - 100' என்ற இரு புதிய எத்தனால் கலப்பு பெட்ரோல் வர உள்ள நிலையில், அதற்கு தேவையான பிரத்யேக சேமிப்பு வசதி, சிறப்பு குழாய்கள், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை தேவை என, டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தற்போதுள்ள பெட்ரோல் நிலையங்களை மேம்படுத்த, அதிக முதலீடு மற்றும் அதற்கான இட வசதி தேவைப்படுகிறது. 'அதேபோல், கூட்டம் நிறைந்த, நகர்ப்புற பங்க்குகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவால்கள், நீண்ட வரிசை காத்திருப்பு, பராமரிப்பு செலவுகள், செயல்பாட்டு சுமை அதிகரிப்பு என, பல சிக்கல்கள் இருக்கின்றன' என்றனர்.

Advertisement