மேற்காசிய போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யூகிக்க முடியாது; மத்திய அமைச்சர் பளீச்

6


புதுடில்லி: மேற்காசிய போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நான் யூகிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டி: பிரதமரின் இந்த 12 ஆண்டுகால ஆட்சியில், நான் 9 ஆண்டுகளாக அவரது குழுவில் அங்கம் வகிக்கிறேன். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல பிரதமர்களின் அரசியல் தலைமையைக் கண்டிருக்கிறேன்; ஆனால், இவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் பிரதமருக்கு இருக்கும் அறிவும், எந்தவொரு விஷயத்தையும் அவர் வழிகாட்டும் விதமும் வியக்கத்தக்கவை.

மேற்காசிய போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நான் யூகிக்க முடியாது. குறிப்பாக, மத்திய அரசின் அமைச்சராக நான் இங்குப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் யூகிப்பது சரியல்ல. ஆனால், எனது அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்ள முடியும். 2014க்குப் பிறகு எப்போதெல்லாம் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ, உதாரணமாக, பிப்ரவரி 2022ல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது அப்போது நம் மாணவர்கள் உக்ரைனில் படித்துக்கொண்டிருந்தனர். போர் மற்றும் குண்டுவீச்சு காரணமாக அவர்களின் தங்கும் விடுதிகள் சேதமடைந்தன.

அந்த நேரத்தில், நம் மாணவர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வருவோம் என்று தெளிவாகக் கூறிய உலகின் ஒரே தலைவர் பிரதமர் மோடிதான். தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட சூழலை எடுத்துக் கொண்டால், உலகளாவிய புள்ளி விவரங்களின்படி, மிக அதிக அளவிலான கச்சா எண்ணெய் அதன் வழியாகவே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, நமது எல்பிஜி விநியோகத்தில் 7 சதவீதம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வந்தது. தற்போதைய போர்நிறுத்தம் ஈரான்-அமெரிக்கா இடையிலான ஒரு ஒப்பந்தமாக மாறக்கூடும் என்கின்றனர். அதேவேளையில், மோதல் மேலும் தீவிரமடையலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பிரதமர் மோடியின் நிர்வாகப் பாணியை எதிர்க்கட்சிகள் தீவிரமாகப் புரிந்துகொண்டு, அதைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவர். 2014, 2019 அல்லது 2024 தேர்தல்கள் என எப்போதுமே, மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் காரணமாகவே மக்கள் பிரதமரின் தலைமையிலான பாஜவுக்கு வாக்களிக்கிறார்கள்; ஏனெனில், நாட்டின் சாமானிய குடிமக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

Advertisement