கூட்டுறவு அதிகாரிகளை கண்டித்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2-ஆவது நாளாக நீடித்தது.

மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து பூட்டிக் கிடப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தேவையற்ற உபகரணங்களை வாங்கச் சொல்லி வற்புறுத்துவது, பணியாளர்களைத் தரக்குறைவாக நடத்துவது போன்ற புகார்களுக்கு உள்ளான மூன்று கூட்டுறவு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கோரி இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.​

கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருந்த பொதுமக்கள், நகைகளைத் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடி பணிகள் தொடங்க உள்ள நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டதால் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பயிர்க்கடன்கள், உர வினியோகம் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளன.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்கத்தினர் அறிவித்துள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சேவைகள் மேலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement