சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடியா?

'ஆண்டுக்கு ஒரு முறை தலைவரை நேரில் பார்த்து விட்டு, ருசியாக சாப்பிடலாம் என நினைத்தால் இப்படி செய்து விட்டாரே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். இதில், மாநிலம் முழுதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 2 லட்சம் பேர் பங்கேற்பர்.

இந்த மாநாட்டில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசி முடித்த பின், சந்திரபாபு நாயுடு உரையாற்றுவார். அதன்பின், அனைவருக்கும் தடபுடலான சைவ மற்றும் அசைவ விருந்து பரிமாறப்படும்.

இந்த விருந்தில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று ஒரு பிடி பிடிப்பர். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஆந்திர தலைநகர் அமராவதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, அமராவதிக்கு புறப்பட தெலுங்கு தேசம் கட்சியினர் தயாராக இருந்தனர்.

ஆனால், மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து, இந்தாண்டுக்கான மாநாட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தெலுங்கு தேசம் கட்சியினர், 'மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாரே தலைவர். மேற்காசிய போரால் இவருக்கு என்ன பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது...' என புலம்புகின்றனர்.

Advertisement