இதே நாளில் அன்று

ஜூன் 12:

தங்கப்பன் நாயர் - சரஸ்வதி தம்பதியின் மகளாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 1932ல் இதே நாளில் பிறந்தவர், பத்மாவதிதேவி எனும் பத்மினி.

இவர், 4 வயதிலேயே கதகளி, பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை கற்று, 10 வயதில் அரங்கேற்றம் செய்தார். இவரது சகோதரிகளான லலிதா, ராகினி ஆகியோரும் நடனத்தில் சிறந்து விளங்கி, 'திருவாங்கூர் சகோதரிகள்' என, புகழ் பெற்றனர். தன் 17வது வயதில் கல்பனா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான பத்மினி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில், 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட நாயகர்களின் ஜோடியாக நடித்தார். சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு உள்ளிட்ட, 59 படங்களில் நடித்தார்.

திருமணத்துக்கு பின் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் குடியேறி, 'பத்மினி ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்ற நடனப் பள்ளியை நடத்தினார். இவரது படத்துடன் தபால் தலை வெளியிட்டு, ரஷ்ய அரசு பெருமைப்படுத்தியது. இவர், தன் 74வது வயதில், 2006, செப்டம்பர் 24ல் மறைந்தார்.

'நாட்டிய பேரொளி' பிறந்த தினம் இன்று!

Advertisement