சீரமைத்த ஒரே ஆண்டில் சேதமான சாலை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா...?
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி– கடலைகொல்லி சாலை சீரமைத்த ஒரே ஆண்டில், இரு மாநில போக்குவரத்து துண்டிக்கப்படும் அளவிற்கு சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பொன்னானி முதல் கடலைக்கொல்லி, மாங்கம்வயல் வரையிலான, 2.8 கி.மீ. துார சாலை, தமிழக– கேரள வாகனங்கள் செல்ல பயன்பட்டு வருகிறது.
சாலை சேதமடைந்து காணப்பட்டதால், பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த, 2023–-24ம் நிதியாண்டில், 2.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடந்தது. கடந்த ஆண்டு முழுமையாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், பருவமழை தீவிரமடைந்த நிலையில், இந்த சாலையில் புலியாடி என்ற இடத்தில் பாலம் முழுமையாக இடிந்து சாலை துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.
இந்த சாலையில், பசுந்தேயிலை, நேந்திரன் வாழை மற்றும் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இரு மாநிலங்களுக்கு செல்லும் நிலையில், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில முதல்வரின் தனிபிரிவுக்கு மனு அனுப்பிய சிவா கூறுகையில்,‘‘ ஓராண்டுக்கு முன் சீரமைக்கப்பட்ட சாலை சேதமானதற்கு காரணமாக, ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி, அவரின் சொந்த பணத்தில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.