'டாஸ்மாக்' மது விற்பனையை தனியார்மயமாக்க பேச்சு துவக்கம்

29

- நமது நிருபர் -

'தமிழக அரசின் மது விற்பனையை தனியாரிடம் வழங்குவது குறித்து, அதிகாரிகள் தரப்பில் முதல்கட்ட பேச்சு தொடங்கி உள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி, 717 கடைகள் மூடப்பட்டன.

ஆலோசனை



இந்நிலையில், அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் மது விற்பனையை தனியார்மயமாக்க, உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது .

இது குறித்து, தலைமை செயலகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தமிழக அரசின் கீழ் உள்ள 'டாஸ்மாக்' நிறுவனம் வழியே, தமிழகம் முழுதும் மது விற்பனை செய்யப்படுகிறது. மாதம் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகள், 35 லட்சம் பெட்டி பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

எந்த மது அதிகமாக விற்பனையாகிறதோ, அந்த மதுவை டாஸ்மாக் நிறுவனம் அதிகமாக கொள்முதல் செய்யும் நடைமுறை உள்ளது.

இதனால், மது உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தில் தயாராகும் மதுவை அதிகமாக விற்பனை செய்ய, டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, 'கவுன்டர் சேல்ஸ்' செய்ய வைத்து, கொள்முதலை அதிகப்படுத்துகின்றன.

டாஸ்மாக்கை பொறுத்தவரை, மது உற்பத்தி முதல் விற்பனை செய்யும் வரை, எல்லா படிநிலையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.

சிண்டிகேட்



இதை சரி செய்வது சாதாரண விஷயமில்லை. எனவே, அண்டை மாநிலங்களில் உள்ளதுபோல் மது விற்பனையை தனியார்மயமாக்க, அரசு கொள்கை முடிவு எடுக்க தயாராகி உள்ளது. அதற்கான முதல்கட்ட பேச்சு சமீபத்தில் நடந்தது.

இதில், டாஸ்மாக், உள்துறை, நிதி துறை, மது விலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட துறை அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஐந்து முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத் தவரை மது உற்பத்தியில் 11 நிறுவனங்கள், பீர் உற்பத்தி யில் ஐந்து நிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன. இந்த சிண்டிகேட்டை உடைத்து, பெரிய சந்தையை உருவாக்க வேண்டும்.

பல மாநிலங்கள், நாடுகளின் மதுவை உள்ளே கொண்டு வர வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். போலி மதுவை ஒ ழிக்க வேண்டும். கொள்முதல் முதல் விற்பனை வரை ஊழலை ஒழித்து, அதை முறையாக கண் காணித்தாலே, அரசுக்கு கெட்டபெயர் இல்லாமல் வருவாய் அதிகரிக்கும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளது .

அதிருப்தி



மது விற்பனையை தனியார்மயமாக்குவதால், அரசின் மீது அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய, 'மதுவை அரசு விற்பது சரியாக இருக்காது' என முதல்வர் விஜய் பேச வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும், கூட்டத்தில் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வருடன் கலந்தாலோசித்து, இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement