உப்பனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க.... மெகா திட்டம்:ரூ.200 கோடியில் விரிவான திட்டம் தயாராகிறது
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மிக முக்கிய வடிகாலாக விளங்கும் உப்பனாற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில், ரூ.200 கோடி மதிப்பில் புதிய மெகா திட்டம் ஒன்றைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்திலிருந்து தொடங்கி உப்பளம் வம்பாகீரப்பாளையம் வரை செல்லும் உப்பனாறு வாய்க்கால், புதுச்சேரியின் மிக நீண்ட மழைநீர் வடிகால் ஆகும். மொத்தம் 3.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வாய்க்காலில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 10 கிளை வாய்க்கால்கள் சங்கமிக்கின்றன.
நகரப் பகுதியின் மழைநீரை எளிதாக வெளியேற்றுவதற்காக பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வாய்க்கால், காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி, தற்போது கழிவுநீர் பாயும் சாக்கடையாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
மழைநீர் வெள்ள வடிகாலில் கழிவுநீரை விடுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், விதிகளை மீறி வீட்டு உபயோகக் கழிவுநீரும், சுத்திகரிக்கப்படாத வணிகக் கழிவுகளும் இதில் தடையின்றி விடப்படுகின்றன. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் ஓட எப்படி அனுமதிக்கப்பட்டது என்று சட்டசபைக் கூட்டத்தொடரிலும் இப்பிரச்னை எதிரொலித்து வந்தது. இதையடுத்து, உப்பனாற்றில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாகத் தடுக்க பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனக் கோட்டம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முன்னதாக ரூ.52 கோடி செலவில் இதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது அது விரிவு படுத்தப்பட்டு ரூ.200 கோடி மதிப்பிலான மெகா திட்டமாக மாற்றப் பட்டுள்ளது.
அதிகாரிகள் தீவிர ஆய்வு இத்திட்டம் தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா நேற்று உப்பனாற்றுப் பாலத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, மழைக் காலங்களில் உப்பனாற்றுக் கழிவுநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் அவதியடைவதைச் சுட்டிக்காட்டிய தொகுதி எம்.எல்.ஏ., நேரு, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார்.
திட்டம் செயல்படும் விதம் உப்பனாற்றில் கலக்கும் கழிவுநீரை பிரத்யேக ராட்சத குழாய்கள் மூலமாக திப்புராயப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு சென்று, அங்கு சுத்திகரிப்பு செய்த பின்னரே கடலில் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. எனினும், ஒருசில பகுதிகளில் இம்முறை சாத்தியப்பட்டாலும், வேறு சில இடங்களில் மாற்று வழிகளை ஆராய வேண்டியுள்ளது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே, இது குறித்து முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு, அதற்கேற்ப கழிவுநீர் உப்பனாற்றில் கலக்காமல் தடுக்க இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
@block_B@ மூன்றாண்டுக்குள் முடியும் செயலர் முத்தம்மா தகவல்
இத்திட்டம் குறித்து பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா கூறுகையில், 'லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், உருளையன்பேட்டை, உப்பளம் ஆகிய ஐந்து தொகுதிகளை கடந்து செல்லும் உப்பனாறு வாய்க்கால் புதுச்சேரியின் மிக நீண்ட வாய்க்காலாகும். இந்த மழைநீர் வடிகாலில் தினசரி 3 எம்.எல்.டி., அளவு கழிவுநீர் செல்கிறது. அதிகரித்துள்ள இந்த கழிவு நீரை பாதாள சாக்கடை மூலம் கொண்டு செல்வதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளன. அதன் பின், ரூ.200 கோடி செலவில் அதற்கான பணிகள் அடுத்த ஆண்டு துவங்கப்பட்டு மூன்றாண்டுக்குள் முடிக்கப்படும். மேலும் தற்போது இந்த வாய்க்கால் மீது கட்டப்பட்டு வரும் மேம்பால இணைப்பு பணிகள் முடிந்து வரும் நிதியாண்டு மார்ச் மாதம் திறக்கப்படும்' என்றார்.block_B
மேலும்
-
வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு
-
அரசு சிற்பக்கல்லுாரியில் 90 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை; ஆசியாவின் ஒரே கல்லுாரியில் முதல்வரும் இல்லை
-
தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
-
வெற்றியுடன் துவங்கியது மெக்சிகோ; சொந்த மண்ணில் அபாரம்
-
கப்பல் கட்டும் தொழிற்சாலை வராதது தான் மாற்றமா?