அமராவதி ஆற்றுப்பாலம் புதுப்பிக்கப்படுமா? பராமரிப்பு இல்லாமல் அச்சம்

உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில் வலுவிழந்து, போதிய பராமரிப்பு இல்லாத மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தை புதுப்பித்து, இரு மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிப்பதை தடுக்க வேண்டும்.

உடுமலை அருகே மடத்துக்குளத்தில், திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. அங்கு, 1986ல், 12 துாண்கள், 152 மீ., நீளத்தில், 10 மீ., அகலத்தில், ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பாலத்தில், கனரக போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. பயன்பாட்டுக்கு வந்து, நீண்ட காலமாகியுள் ளதால், பாலம் வலுவிழந்து வருகிறது. அதிக வாகனங்கள் செல்லும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி, அதிர்வுகள் ஏற்படுகிறது. ஓடுதளம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பக்கவாட்டு சுவர்களில் முளைத்த செடி, கொடிகள் அகற்றப்படவில்லை. இதனால், சுவர்கள் பல இடங்களில், உடைந்து அவ்வழியாக செல்பவர்களை அச்சுறுத்தி வருகிறது.

பக்கவாட்டு சுவரையொட்டி, பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதை நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இரு மாவட்ட எல்லையில், பல மாதங்கள் அதிக நீரோட்டம் இருக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்ட இப்பாலத்தின் பராமரிப்பில், நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக புகார் உள்ளது.

கடந்த, 2015ல், ஆற்றுப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வால், முக்கியத்துவம் வாய்ந்த பாலம் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது. தேவையான எச்சரிக்கை பலகைகளும், பாலத்தின் இருபுறங்களிலும் வைக்கப்படவில்லை.

பாலத்தின் உறுதித்தன்மையை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, முழுமையாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement