தி.மு.க.,வில் இணைந்தார் அ.தி.மு.க., 'மாஜி' பெஞ்சமின்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், நேற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

கடந்த 2016 தேர்தலில், சென்னை மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றவர் பெஞ்சமின். அவரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமித்தார்.

அவர் மறைவுக்கு பின், பழனிசாமி அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருந்தார்.

அ.தி.மு.க.,வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலராக இருந்த பெஞ்சமின், கடந்த 2021 மற்றும் 2026 தேர்தல்களில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு பின், த.வெ.க.,வுக்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையிலான அணிக்கு பெஞ்சமின் ஆதரவு அளித்தார்.

இதனால் கோபமுற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பெஞ்சமின் வகித்து வந்த கட்சி பதவிகளை பறித்தார்.

இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்து, அக்கட்சியில் பெஞ்சமின் இணைந்தார்.

பின், பெஞ்சமின் கூறுகையில், ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் அன்பாலும், அரவணைப்பாலும் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் இணைந்துள்ளேன்,'' என்றார்.

Advertisement