‘பள்ளியை சூறையாடிய கும்பல் கடும் நடவடிக்கை அவசியம்’

திருப்பூர், ஜூன் 12–

திருப்பூர், எஸ்.வி.காலனி, ராமசாமி – மாணிக்கம்மாள் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்குள் கடந்த 7-ம் தேதி இரவு புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள மூன்று மின்விசிறிகளை உடைத்து, கழிப்பறையில் இருந்த மின் கம்பிகளை திருடிச் சென்றுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கஞ்சா கும்பலின் இச்செயலால் பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



பெற்றோர் கருத்து



நிலாவர்ஷினி (எஸ்.வி.காலனி): பல நல்ல உள்ளங்கள் செய்து கொடுத்த உதவியால் இந்த ஆண்டுதான் குழந்தைகளுக்குப் புதிய வகுப்பறை கிடைத்தது. பள்ளிக்குள் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எங்களின் பயம் நீங்கும்.



முகமது ரபீக் (ராமநாதபுரம்): எனது இரு குழந்தைகளும் ஆறு ஆண்டுகளாக இங்குதான் படிக்கின்றனர். மரத்தடியில் படித்த நிலை மாறி, மெல்ல வசதிகள் கிடைத்து வரும் வேளையில், வெளியாட்கள் புகுந்து திருடியுள்ளனர். காவல்துறை அவர்களை உடனடியாகக் கைது செய்து எங்களின் பயத்தைப் போக்க வேண்டும்.





பள்ளித் தலைமையாசிரியை பரிமளர்விழி கூறுகையில், ‘‘பள்ளியின் நிலை குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளிடமும், கவுன்சிலரிடமும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது’’ என்றனர்.



@block_B@ பள்ளியில் கண்காணிப்புக் கேமராக்கள் (சி.சி.டி.வி) பொருத்துவது, பாதுகாவலர்களை நியமிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொருட்களைச் சேதப்படுத்திய கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை. – சித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) .block_B

Advertisement