கூடலுார் ஏரியில் மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை
மதுராந்தகம்: கூடலுார் ஏரியில் கிடந்த மனித எலும்புக்கூடு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடலுார் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 300 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.
இங்கு நேற்று முன்தினம், கிராமத்தைச் சேர்ந்த சிலர் வலை வீசி மீன் பிடித்து உள்ளனர். அப்போது, ஏரி சேற்றில் இருந்து எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு சிக்கி உள்ளது.
இது குறித்து, நேற்று மேல்மருவத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கூடலுார் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்கு முன், வெங்கடேசன், 52, என்கிற நபர் காணாமல் போய் உள்ளார்.
அவரின் உடலா அல்லது வேறு யாரேனும் உடலா என, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.