ஏற்றுமதியாளருக்கு கடன்; சிக்கல் நீங்குகிறது 'டீமா' புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்துக்குத் தேவையான நிதியை எளிதாகப் பெறும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட 'டிரிப் கேபிடல்' நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
'டீமா', 'டிரிப் கேபிடல்' மற்றும் 'க்ரோமேக்ஸ் பின்டெக்' நிறுவனங்கள் சார்பில், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் நிதித் தேவைகள் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் நடந்தது. 'டீமா' தலைவர் முத்துரத்தினம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
'டிரிப் கேபிடல்' நிறுவன துணைத்தலைவர் முதாஸ்ரீகான் பேசுகையில், ''இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், திருப்பூருக்கு சர்வதேச சந்தைகளில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. இவற்றை செயல்படுத்த தேவையான நிதி உதவிகளை விரைவாக வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன'' என்றார்.
'டீமா' மற்றும் 'டிரிப் கேபிடல்' நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முத்துரத்தினம் கூறியதாவது:
வங்கிகள் பெரும்பாலும் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் வழங்குவதால், பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்கின்றன. இதற்கு மாற்றாக, 'டிரிப் கேபிடல்' நிறுவனம் ஏற்றுமதி ஆர்டர்களின் அடிப்படையில் விரைவாக நிதி வழங்குகிறது. வட்டி விகிதமும் 8.5 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்களை தாமதமின்றி செயல்படுத்த முடியும். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிக பயன் பெறும். மேலும், வெளிநாட்டு இறக்குமதியாளர்களின் நம்பகத்தன்மையையும் இந்நிறுவனம் ஆய்வு செய்து வழங்குவதால், ஏமாற்று வர்த்தகர்களை அடையாளம் கண்டு தவிர்க்க முடியும்.
திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு அதிகரித்து வரும் சர்வதேச ஆர்டர்களை முழுமையாக பயன்படுத்தி ஏற்றுமதியை உயர்த்த இந்த ஒப்பந்தம் உதவும்.
இவ்வாறு, முத்துரத்தினம் கூறினார்.
மேலும்
-
தி.மு.க., - த.வெ.க., தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித்ஷா பேச்சு
-
இடுக்கியில் பன்றிக்காய்ச்சல் பலி எல்லையில் முகாம் அமையுங்கள்
-
மருத்துவமனையில் மாணவர் கவலைக்கிடம் தவறான சிகிச்சை காரணம் என ஆர்ப்பாட்டம்
-
மண்டல பூஜை
-
தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்
-
காரைக்கால் கோவிலில் சிலையை அவமதித்த நபருக்கு போலீஸ் வலை