அரசு துறை டெண்டர்களில் முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவு

7


சென்னை: தமிழக அரசு துறைகளில் நடந்த, பல கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு: மாநில அரசின் உள்கட்டமைப்பு பணிகள் சார்ந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கோரினேன். அதில் கிடைத்த விபரங்களை ஆய்வு செய்ததில், அரசின் பல்வேறு துறைகளில் போலியான ஆவணங்கள் வாயிலாக, குறிப்பிட்ட நிறுவனத்துக்கே ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக, அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2022ம் ஆண்டு முதல், 12க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணிகளை, 'சீ ராக் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்' மற்றும் 'ஸ்ரீ பதி அசோசியேட்ஸ்' ஆகிய, இரண்டு நிறுவனங்கள் போலியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பெற்று உள்ளன.

இரு நிறுவனங்களும், அரசு ஒப்பந்தங்களில் யாரும் பங்கேற்காத வகையில், கூட்டு சேர்ந்து தங்களுக்குள் போலியான போட்டியாளர்களாக காட்டி, பல்வேறு முறைகேடுகளை செய்து உள்ளன. டெண்டர் தகுதியை பெறுவதற்காக சமர்ப்பித்த துணை ஒப்பந்ததாரர் அனுபவ சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பதும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விபரங்கள் வாயிலாக உறுதியாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, 2025 ஆகஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறைக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'போலி ஆவணங்கள், சான்றிதழ்களால் பெறப்பட்ட ஒப்பந்தங்களால், மாநில அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''மனுதாரர் அளித்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் குழு அமைத்துள்ளார். அக்குழு கூட்டம் மே, 26ல் நடந்துள்ளது. ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்த முறைகேடுகள் புகார் தொடர்பாக, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அமைத்த குழு, எட்டு வாரத்தில் விசாரணை நடத்தி, அது தொடர்பான விபரங்களை, லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த நபர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கையை, லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement