காஞ்சி கிழக்கு ரயில் நிலையத்தில் கால அட்டவணை பலகை அவசியம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை தகவல் பலகை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் என அழைக்கப்படும், பழைய ரயில் நிலையம் வழியாக தினமும், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை பீச் வரை ‘பாசஞ்சர்’ ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் ரயிலில் பயணம் செய்து வருகின்னர்.
ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்கும் கவுண்டர் அருகில், ரயில் கட்டணம் தொடர்பான தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை, சிறிய அளவிலான தாளில் ஒட்டப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான எழுத்துக்களால் வயதானவர்கள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் கண்களுக்கு தெளிவாக தெரிவதில்லை. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு ரயிலில் பயணம் செய்ய முடியாமல் பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, ரயில் கால அட்டவணை குறித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பெரிய அளவில் தகவல் பலகை அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.