'2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கை மறந்த ஸ்டாலின்!
டாக்டர் அர்த்தநாரி, சென்னையில் இருந்து எழுதிய கடிதம்: கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட், ஜாதி கட்சிகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவற்றின் ஓட்டைப் பெற்று, ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி ஊழலில் திளைத்து, கோடிகளை குவித்து வந்தன, இரு திராவிட கட்சிகளும்!
ஆனாலும், கம்யூனிஸ்ட் போன்ற பெரிய கட்சிகள் கூட, அதிகாரத்தில் பங்கேற்பது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
காரணம், மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து, எளிமையாக வாழ்ந்த ஜீவானந்தம், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி பாலதண்டாயுதம், மோகன் குமார மங்கலம் போன்ற தலைவர்கள் இப்போது அக்கட்சியில் இல்லை!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கன்ஷி ராம், தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்தார். இவர் தன் டாக்டர் நண்பர் ஒருவரிடம், 'எனக்கு அதிகாரம் மட்டும் முக்கியமல்ல; பிரதமர் பதவியை கைப்பற்றுவதே குறிக்கோள்' என, வெளிப்படையாக சொன்னாராம்!
தன் லட்சியத்தை செயலாற்றும் விதமாக, தன் சிஷ்யை மாயாவதியை தயார் செய்தார்; மாயாவதியும் உ.பி., அரசை கைப்பற்றி முதல்வர் ஆனார்.
இந்த தைரியம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இல்லாததால், 'ஆட்சி, அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்' என்று அதட்டிக் கேட்க துணிவில்லாமல், திராவிட கட்சிகளிடம் கைகட்டி நிற்கின்றன.
கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகளை தங்கள் வீட்டு திண்ணையில் அமர வைத்து விருந்து கொடுத்த திராவிட கட்சியினர் மத்தியில், அவர்களை, 'டைனிங்' அறையில், சரி சமமாக அமர வைத்து விருந்து கொடுத்துள்ளார், தமிழக முதல்வர் விஜய்!
சந்தர்ப்பவாத அரசியலில் கைதேர்ந்த தி.மு.க.,வோ, மத்தியில், முன்னாள் பிரதமர் இந்திராவின் மறைவிற்கு பின், ஜனதா கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றது; பின், பா.ஜ., வாஜ்பாய் ஆட்சியில் இடம் பெற்றது. ஐந்தாண்டுகள், அங்கே கோலோச்சி, சுய பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டது.
பின், வாஜ்பாய் அரசு மீண்டும் அமையாது என்று கணக்கு போட்டு, அப்போதைய காங்., தலைவி சோனியாவை சந்தித்து, காங்கிரசோடு கூட்டணி அமைத்தது. அதன்பின், 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வளம் நிறைந்த பதவிகளை பெற்று, '2ஜி ஸ்பெக்ட்ரம், உரம், கப்பல் போக்குவரத்து' போன்ற பல துறைகளில் ஊழல் செய்து, பெரும் பொருள் ஈட்டியது.
தி.மு.க.,வின் ஊழலால் வீழ்ந்த காங்கிரஸ், அதன்பின் எழவே இல்லை; ஆனால், காங்கிரசால் வளம் கொழித்த தி.மு.க.,வோ, இப்போது காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, சற்றே தலை துாக்கியுள்ளதை தாங்க முடியாமல் கொதிக்கிறது.
'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழலை பெரிதுபடுத்தாமல், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருந்த சோனியாவை மறந்து, காங்கிரசை வசைபாட, தன் கட்சியினருக்கு அனுமதி கொடுத்துள்ளார், அக்கட்சி தலைவர் ஸ்டாலின்!
காலந்தோறும் சந்தர்ப்பவாத அரசியல் செய்து, பதவி சுகம் அனுபவித்து, பொருள் ஈட்டி வந்த தி.மு.க., இப்போது, காங்கிரசை சந்தர்ப்பவாத கட்சி என்கிறது.
என்னே அரசியல் முரண்பாடு!
அரசியல்,'அவியல்' வேண்டாமே!
அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அக்குற்றங்களை தடுக்க, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' எனும் திட்டத்தை துவக்கியுள்ளார், தமிழக முதல்வர் விஜய்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், பெண்களுக்கு என்று தனியாக மகளிர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது; தி.மு.க., ஆட்சியில் மகளிர் பாதுகாப்புக்கு என்று திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், எதுவும் கைகொடுக்கவில் லை.
அவ்வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' எனும் பெயரில் அதிரடிப் படையை உருவாக்கியுள்ளார், விஜய்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன்பே, எதிர்க்கட்சியினர் அது குறித்து, அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு விதை, முளைவிடும் முன்பே, அதை பதர் என்பது எத்தனை அறிவற்ற செயலோ, அதைப் போன்றது தான், ஒரு திட்டம் துவங்கும் போதே, அதன் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பதும்!
ஓர் அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை செயல்படுத்தி, அது முறையாக நடைமுறைக்கு வர ஒரு சில நாட்களாவது தேவைப்படும். அதுவரை பொறுத்திருந்து விமர்சனம் செய்யலாமே!
எதிர்க்கட்சிகள் என்றால் எதிலும் அரசியல், 'அவியல்' தான் செய்ய வேண்டும் என்பது இல்லையே!
காம்ரேடுகளின் தி.மு.க., பாசம்!
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தியை, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
உடனே, 'தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, சமூக நீதி கூட்டணி சார்பாக, என்னை வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி' என, சமூக வலைதளத்தில் பிரவீன் பதிவிட, அதைப் பார்த்து கொந்தளித்து விட்டனர் கம்யூ., கட்சியினர்.
'பிரவீன் அதிகப் பிரசங்கித்தனமாக பதிவிட்டுள்ளார்' என, சி.பி.எம்., மாநில செயலர் சண்முகம் அனலைக் கக்க, 'அனுமதி இல்லாமல் இடதுசாரி களின் பெயரை எப்படி பதிவில் சேர்க்கலாம்?' என்று சி.பி.ஐ., மாநில செயலர் வீரபாண்டியன் கொதிக்க, பாவம் பிரவீன் சக்கரவர்த்தி... இவர்களை சமரசம் செய்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டார்.
கம்யூனிஸ்டுகள் இன்னும் தி.மு.க., கூட்டணியில் இருப்பதாகவே நினைக்கின்றனர்; அதனால் தான், 'எங்கள் கூட்டணி கட்சியினர் தயவில் தான் விஜய் ஆட்சி நடத்துகிறார்' என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் போலும்!
மலையாளத்தில், செம்மீன் என்று ஒரு பழைய திரைப்படம்... அப்படத்தில், திருமணத்திற்கு பின்னரும் முன்னாள் காதலன் நினைவில் வாழ்ந்து, கடைசியில் அவனுடனே உயிரை விடுவாள் கதாநாயகி. அந்த கதாநாயகியை போல் உள்ளனர் காம்ரேடுகள்!
காம்ரேடுகளின் இந்த தள்ளாட்டம், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இருக்குமா அல்லது அதன்பின்பும் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
திண்டுக்கல் ஹரிஹரன் அவர்களே ....... திமுக என்பது டிவிகே யின் எஜமான கட்சி ...... அதாவது டிவிகே திமுகவின் ஒரு பலம் வாய்ந்த பி டீம் .... கொள்கைகள் ஒன்றுதான் .... பொறுப்பற்ற நிர்வாகம், ஊழல் மலிந்த அரசு நிர்வாகம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அப்படியே தொடரும் ....
டாக்டர் அர்த்தநாரி சாட்டையடி கொடுத்துள்ளார் ..... பாராட்டுக்கள் .....மேலும்
-
நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை; கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்!
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி