நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: கணக்காளர் கைது

ஆர்.கே.பேட்டை:நெல் கொள்முதல் செய்ய, விவசாயிடம் 10,750 ரூபாய் லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலைய கணக்காளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த தாமனேரியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில், பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடியை சேர்ந்த சவுந்தர், 27, என்பவர், கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம், 50, என்பவர், இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய பதிவு செய்திருந்தார்.

ஆனால், கணக்காளர் சவுந்தர், இவரது நெல்லை கொள்முதல் செய்யாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். மேலும், செல்வத்தின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமானால், ஒரு மூட்டை நெல்லுக்கு 50 ரூபாய் வீதம், 215 மூட்டைகளுக்கு 10,750 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத செல்வம், இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று செல்வம், சவுந்தர் கேட்ட 10,750 ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையான போலீசார், சவுந்தரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின், திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement