மக்களின் இதயத்தை வெல்லுங்கள்!
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாற்றத்தை விரும்பி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டளித்த மக்கள் மனதில், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, வளர்ச்சி ஆகியவை தான் முதன்மையான எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.
இந்நிலையில், ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே, அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுவது, தனி மனித தாக்குதல் நடத்துவது, வார்த்தைப் போர்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் இறங்குவது, முகம் சுளிக்க வைக்கின்ற ன.
தேர்தல் காலத்தில் இத்தகைய அரசியல் பேச்சுகள் இருக்கலாம்; ஆனால், மக்கள் உங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த பின், உங்கள் கவனம் முழுதும் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் தான் இருக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற வெற்று வார்த்தை போர்களில் அல்ல!
மக்களின் எதிர்பார்ப்பு வேலைவாய்ப்பு, தரமான கல்வி, உயர் தர சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து, வலுவான முதலீடு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி போன்றவை தான்!
முதல்வர் விஜய் இதை உணர்ந்ததால் தான் பதவி ஏற்றவுடன், தன் முதல் உரையில் இக்கருத்துகளை வலியுறுத்தினார்.
எனவே அமைச்சர்களும், இதை மனதில் கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களில் அல்லது பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதால், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு அடைந்து, வாழ்க்கை தரம் உயர்ந்து விடாது!
அதனால், அமைச்சர்கள், அரசியல் எதிரிகளை விமர்சிப்பதை விட, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் போட்டி போட வேண்டும்; கர்மவீரர் காமராஜர் போன்று செயல்களால் பதிலளிக்கும் அரசியல் கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
ஒரு மாத கால ஆட்சியை மக்கள் பொறுமையுடன் கவனித்து வருகின்றனர்; இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டிய பொறுப்பும் அமைச்சர்கள் முன் நிற்கிறது. எனவே, தேவையற்ற அரசியல் சர்ச்சைகளில் நேரத்தையும், ஆற்றலையும் செலவிடாமல், மக்கள் கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
எதிரிகளை வெல்வதை விட, மக்களின் இதயங்களை வெல்வதே ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி!
செயல் திறன் கொண்ட அதிகாரிகள் தேவை!
கோ.மாரிசேர்வை, ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான் மின் வாரியத்தில், 30 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றவன்; தற்போது என் வயது, 81.
சில நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, மின்வாரிய பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கு காரணம், தற்போது மின் வாரியத்தின் தலைவராக உள்ள, ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.,!
பத்திரிகை செய்திகளை பார்த்து, முக்கியமாக 'தினமலர்' நாளிதழ் செய்திகளை படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன் துறை சார்ந்த விஷயங்களை களைவதி ல் ஆர்வம் காட்டுவார்.
இதற்கு உதாரணமாக என் சொந்த அனுபவத்தை கூறுகிறேன்...
சிவகங்கை மாவட்டத்தின் கலெக்டராக ராதாகிருஷ்ணன் இருந்த காலத்தில், 'சிக்கன்குனியா' என்ற தொற்று நோய் காரணமாக, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.
அப்போது, நான் குடியிருந்த வீதியில், சாக்கடை அடைத்து, கொசுத் தொல்லை அதிகமாக இருந்தது. அதுகுறித்து தினமலர் நாளிதழ் சிவகங்கை பதிப்பில் செய்தி வெளியானது.
இச்செய்தியை அதி காலையில் ராதாகிருஷ்ணன் படித்துள்ளார் போலும்! உடனே,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சாக்கடையை சுத்தம் செய்ய உத்தர விட்டுள்ளார்.
காலை, 6:-30 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வந்த அதிகாரிகள், துாங்கிக் கொண்டிருந்த தெருவாசிகளை எழுப்பி, பிரச்னைகளை கேட்டனர்; அப்போது, கலெக்டரும் உடன் இருந்தார்.
அதன்பின், மின்னல் வேகத்தில் தெரு சுத்தமானது.
இன்று, அதே அதிகாரி மின்வாரியத்தின் தலைவராக உள்ளார். விரைவாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பாரா?
அதேபோன்று, மின் வாரியத்துக்கு விஜயராகவன் ஐ.ஏ.எஸ்., தலைவராக இருந்த காலம், மின் வாரியத்துக்கு பொற்காலம் என்றே சொல்லலாம்!
அரசு என்ன தான் திட்டம் போட்டாலும், செயல் திறன் உள்ள அதிகாரிகளால் மட்டுமே மக்கள் நன்மை அடைகின்றனர்.
அவ்வகையில், ராதா கிருஷ்ணனும் ஒருவர்!
மக்களின் எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரம்!
அரியூர் ரேணுகா நாராயணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியதிலிருந்து மின்தடையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், 'ஆவடி போன்ற இடங்களில், சில நபர்கள் வேண்டுமென்றே, 'பியூஸை' பிடுங்கி திருடிச் சென்றுள்ளனர்; இதற்கான வீடியோக்கள் கிடைத்துள்ளன' என்று கூறியுள்ளார், மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார்.
காவல் துறையையும், ஒட்டுமொத்த உளவுத் துறையையும் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி அமைச்சர், குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்காமல், ஊடகங்களுக்கு முன், இப்படி புலம்புவதை என்னவென்று சொல்வது!
இப்படித்தான் கடந்த தி.மு.க., ஆட்சியில் மின்தடை ஏற்பட்டபோது, 'அணில்கள் மின்சார கம்பிகள் மீது ஓடியதால் மின்தடை ஏற்பட்டது; மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது' என்று விநோதமான காரணங்களை கூறினார், அப்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்த ஆட்சியிலோ, 'பியூஸ்களை திருடிச் சென்றுள்ளனர்' என்று கதை கூறுகின்றனர்.
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு சிலர் மின்தடை ஏற்படுத்துவதாகவும், அதுகுறித்த வீடியோக்கள் கையில் இருப்பதாகவும் கூறும் அமைச்சர், அவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடாமல், 'காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் வீடியோ வெளியிடப்படும்' என்று இழுத்தடிப்பது எதற்கு ?
மேலும், 'தரைக்கு அடியில் செல்லும் மின் கேபிள்களை, தனியார் நிறுவனங்கள் சேதப்படுத்துகின்றன' என்றும் குற்றஞ்சாட்டுகிறார்.
சாலை பணிகள் நடக்கும் போது, மின்வாரிய அதிகாரிகள் அங்கு நேரில் சென்று கண்காணிக்காதது ஏன்?
'பல மணி நேரமாக மின் தடை ஏற்படுகிறதே...' என்று கேட்டால், 'மின் வாரியத்தில், 15,000 பேரை புதிதாக நியமிக்கப் போகிறோம், காலிப் பணியிடங்களை நிரப்புவோம்' என்ற எதிர்காலக் கதைகளை கூறிக் கொண்டிருக்கிறார், அமைச்சர்.
மக்கள் எதிர்பார்ப்பது அமைச்சரின் ஒப்புதல் வாக் குமூலங்களையோ, வீடியோக்களையோ அல்ல; தடையற்ற மின்சாரத்தையும், தவறு செய்வோர் மீதான உடனடி நடவடிக்கையையும் தான்!