'டவுட்' தனபாலு
தி.மு.க., செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்: எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, த.வெ.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, இரண்டு அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி பெற்றுள்ளது. இது, காங்கிரசை வளர்க்கும் முயற்சி அல்ல. அவர்கள் வளர வேண்டுமானால், தனியாக போட்டியிட்டு வளர வேண்டும். த.வெ.க., வளர்வதற்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது என்பது தான் பொருள்.
டவுட் தனபாலு: அதாவது, 'காங்., என்றுமே எங்களுக்கு அடிமையாக இருந்து சேவகம் செய்யணும்... அவங்க தோள்ல ஏறி நாங்க ஆட்சிக்கு வருவோம்... அவங்க தகுதிக்கு அதிகபட்சம், எம்.எல்.ஏ., பதவிதான் தருவோம்... அதை மீறி அவங்க ஆசைப்பட்டது தப்பு'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: பா.ம.க., சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், 'மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, முதல்வர் விஜயை சந்தித்து வழங்கினோம். மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், தமிழகத்தில் உள்ள 2.25 கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த துல்லியமான நிலையை கண்டறிய முடியும். எனவே, வரும் 18ம் தேதி கவர்னர் உரையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை அறிவிக்குமாறு வலியுறுத்தினோம்.
டவுட் தனபாலு: ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம் என்பதால் தான், கடந்த தி.மு.க., ஆட்சி உங்க கோரிக்கையை கண்டுக்கவே இல்லை... அரசியலுக்கும், ஆட்சிக்கும் புதியவரான விஜய், உங்க கோரிக்கையை உடனே ஏத்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்!
தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சார்பில், ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த நான்கு பேர் மீதான நடவடிக்கை துவங்கியுள்ளது. கட்சி கொறடா உத்தரவை மீறி, ஒரு எம்.எல்.ஏ., ஓட்டு போட்டால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாம் என விதி சொல்கிறது. எனவே, இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற இந்த நாலு பேருமே, தங்களது எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா பண்ணிட்டு, ஆளுங்கட்சியான த.வெ.க.,வில் சேர்ந்துட்டாங்களே... இனிமே, அவங்களை தகுதி நீக்கம் பண்ணி, பழனிசாமி என்னத்தை சாதிக்க போறார் என்ற, 'டவுட்' வருதே!
மேலும்
-
இன்று இனிதாக (13.06.2026) சென்னை
-
மடிவாளா குண்டு வெடிப்பு குற்றவாளி தீர்ப்பு வருவதற்கு முன் உயிரிழப்பு
-
மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் சிவகுமார் 9 கோரிக்கை
-
ஐ.ஏ.எஸ்., ரோகிணி, ஐ.பி.எஸ்., ரூபா மோதல் சமரசம் செய்ய ஓய்வு நீதிபதி குரியன் நியமனம்
-
சிறுமி கொலை வழக்கு
-
என்ன வழக்கு என்றுகூட தெரியாமல் ஆஜரான மாநகராட்சி அதிகாரிக்கு ஆணையம் கண்டிப்பு