சிற்றுந்து -மீது- பேருந்து மோதி 4 பேர் படுகாயம்; பைக் நாசம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், சிற்றுந்து மீது பேருந்து மோதிய விபத்தில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். விபத்தின்போது, சிற்றுந்தின் சக்கரத்தில் சிக்கிய பைக்கும், அப்பளம்போல நொறுங்கியது.

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து ‘நல்லமணி’ என்ற தனியார் சிற்றுந்து, நேற்று காலை 8:00 மணி அளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்டது.

ஜி.எஸ்.டி., சாலை சீனிவாசபுரம் சந்திப்பில், ‘யு டர்ன்’ எடுக்க திடீரென திரும்பியது. அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சிற்றுந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், சிற்றுந்தில் பயணித்த காயரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 17, லோகேஸ்வரி, 33, மேல்மருவத்துாரைச் சேர்ந்த ரகுநாதன், 75, கல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சரத்பாபு, 33, ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அதுமட்டுமல்லாமல், பின்னால் வந்த ‘ஹீரோ பேஷன்’ பைக்கும், சிற்றுந்தில் மோதி விபத்திற்குள்ளாகி, அப்பளம்போல நொறுங்கியது. அதில் வந்த வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக, காயமின்றி தப்பினர்.

அங்கிருந்தவர்கள், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement