ராஜ்யசபா வேட்பு மனு விவகாரம்; மீனாட்சி நடராஜன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

10


புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜ சார்பில் மூவரும் காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜனும் போட்டியிட்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன், தெலுங்கானா நீதிமன்றத்தில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்கை மறைத்ததாக பாஜ வேட்பாளர் மகேஷ் கெவத் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மீனாட்சியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டம். அதை செய்யாமல் மறைத்து விட்டார் என்பதே மீனாட்சி நடராஜன் மீதான புகார்.

ஆனால் தேர்தல் அதிகாரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் முறையிட்டது. ஆனால், தேர்தல் அதிகாரியின் செயல் சட்டபூர்வமான என்பதால் தேர்தல் கமிஷன் தலையிட மறுத்தது. சுப்ரீம் கோர்ட்டிலும் மீனாட்சி நடராஜன் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் இன்று மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி நீண்ட நேரம் வாதிட்டார்.

எனினும், மனுவை விசாரித்த நீதிமன்றம், ''இது போன்ற விவகாரங்களில் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்வதே சரியாக இருக்கும். இந்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை. தள்ளுபடி செய்கிறோம்'' என உத்தரவிட்டது.

Advertisement