மல்லிகார்ஜூன கார்கே உள்பட 24 பேர் ராஜ்யசபா எம்பியாக போட்டியின்றி தேர்வு
புதுடில்லி: மல்லிகார்ஜூன கார்கே, தருண் சுக் உட்பட 24 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் காலியாக உள்ள 27 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், 24 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் உள்ளிட்ட 24 பேர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 19 இடங்களைக் கைப்பற்றியது. மீதமுள்ள 5 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. என்டிஏ வென்றுள்ள 19 இடங்களில், 16 இடங்கள் ஏற்கனவே அந்தக் கூட்டணியின் வசம் இருந்தவையாகும். எனவே, ராஜ்யசபாவில் அதன் பலம் மூன்று இடங்களாக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் வென்ற ஐந்து இடங்களில், நான்கு இடங்கள் ஏற்கனவே அக்கட்சியிடம் இருந்தவை என்பதால், அதன் பலம் ஒரே ஒரு இடம் மட்டுமே அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தவெக வசம் இருந்த சீட்டை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. அந்த இடத்திற்கு போட்டியிட்ட பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மற்றும் மிசோரம் மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.