இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு தேவை கருத்தரங்கில் தோட்டக்கலை அதிகாரிகள் அறிவுரை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறையின் சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் ‘‘கிஸான் மேளா’ ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும், ஜீவ அமிர்தம், பஞ்சகாவியா,மீன் அமிலம் ஆகிய இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்தப்பட்டு அவற்றின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நம்மாழ்வார் அங்கக வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் பேராசிரியர் சிவக்குமார், ‘அங்கக வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள்,’ குறித்து விளக்கம் அளித்தார். இயற்கை விவசாய சங்கத்தின் தலைவர் பெள்ளியப்பன், ‘இயற்கை விவசாயத்தின் முக்கிய பங்கு,’ குறித்து விளக்கினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை முறைகளை பின் பற்றுவதற்கான ஊக்கமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக தோட்டக்கலை துறையின் கண்காட்சி அரங்கில், இயற்கை முறையில் விளைந்த தேயிலை, காபி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தேன், இயற்கை இடுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நவநீதா, உழவர் பயிற்சி நிலையத்தின் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயலட்சுமி, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.