தென் கொரியா முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதிப்பு
நமது நிருபர்
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிரி நாட்டிற்கு உதவிய குற்றத்திற்காக, தென் கொரியா முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது மற்றும் வடகொரிய எல்லைக்குள் ஆளில்லா விமானங்களை அனுப்பியது தொடர்பான பல்வேறு வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில், நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி, கிளர்ச்சியைத் தூண்டிய குற்றத்திற்காக சியோல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
தற்போது பியான்ங்யாங் மீது ஆளில்லா விமானங்களை அனுப்பிய வழக்கில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிரி நாட்டிற்கு உதவிய குற்றத்திற்காக நீதிமன்றம் கூடுதலாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
அவர் கைது செய்வதைத் தடுத்தது மற்றும் சட்டத்தை மீறியது தொடர்பான வழக்குகளில் அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காவலில் உள்ள யூன், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் பதவியில் இருந்தபோது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி யூன் சுக் இயோல் 2024 டிசம்பரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்டதேர்தலில் லீ ஜே மியுங் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.